வங்கதேசத்தின் அதிபர் ஆலம்கீர்: மக்கள் புரட்சியின் முடிவில் ஒரு திருப்பம்!
இந்த அரசியல் மாற்றத்தின் வேர்கள் 2024ஆம் ஆண்டில் தொடங்கிய பொதுமக்கள் கிளர்ச்சியிலிருந்து தொடங்கியது எனலாம்.

வங்கதேசத்தின் புதிய அதிபராக ஆலம்கீர் (Mirza Fakhrul Islam Alamgir) தேர்வு செய்யப்பட்டிருப்பது, அந்த நாட்டின் கடந்த மூன்று ஆண்டுகால அரசியல் பரபரப்பின் உச்சநிலையை ஒரு அமைதியான முடிவுக்கு இட்டு வந்திருப்பதாகப் பார்க்கப்படுகிறது. நாடாளுமன்ற வாக்கெடுப்பில் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்ற அவர், 35 ஆண்டுகளுக்குப் பிறகு நடந்த, போட்டிகளுக்கிடையிலான அதிபர் தேர்தலில் தேர்வாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த அரசியல் மாற்றத்தின் வேர்கள் 2024ஆம் ஆண்டில் தொடங்கிய பொதுமக்கள் கிளர்ச்சியிலிருந்து தொடங்கியது எனலாம். நீண்ட காலம் ஆட்சி செய்த ஷெய்க் ஹசீனா (Sheikh Hasina) அரசு மீது ஊழல் மற்றும் அதிகாரக் குவிப்பை மையப்படுத்தல் ஆகிய குற்றச்சாட்டுகள் எழுந்தன. அந்தச் சூழ்நிலையில், மாணவர் போராட்டங்கள் வெடித்தன. அதன் பின்னர் ஹசீனா ஆட்சி கவிழ்க்கப்பட்டு, இடைக்கால அரசை யூனிஸ் (Muhammad Yunus) தலைமையில் அமைத்தனர்.
இந்த இடைக்கால ஆட்சி சுமார் 18 மாதங்கள் நீடித்து, அரசியல் சீர்திருத்தங்களுக்கு வழிவகுத்தது. அதன் பின்னர் 2026 பொதுத் தேர்தலில் வங்கதேச தேசியக் கட்சி (Bangladesh Nationalist Party) மீண்டும் ஆட்சிக்கு வந்து, தாரிக் (Tarique Rahman) பிரதமராக பதவியேற்றார்.
இந்த அரசியல் மாற்றங்களின் மத்தியில், ஹசீனாவுடன் நெருக்கமாக இருந்த முன்னாள் அதிபர் முகமது ஷஹாபுத்தீன் பதவி விலகியதும் புதிய தேர்தலுக்கு வழிவகுத்தது. இவ்வாறான கலகலப்பான சூழ்நிலையில் அதிபராக உயர்ந்த ஆலம்கீர், அரசியல் மாற்றத்தின் சின்னமாக மட்டுமல்ல; வங்கதேசம் ஜனநாயக மாற்றத்தின் புதிய கட்டத்தை எட்டியதற்கான அடையாளமாகவும் பார்க்கப்படுகிறார்.
எனினும் இந்த ஆண்டில் வங்க தேசத்தில் கசப்பான நிகழ்வுகளுக்கும் பஞ்சமில்லாமல் இருந்தது. மாணவர் இயக்கங்கள் தீவிரமடைந்து 2024ஆம் ஆண்டு Sheikh Hasina ஆட்சி கவிழ்ந்த பிறகு, நாட்டின் சட்ட-ஒழுங்கு நிலை தாறுமாறான சூழ்நிலையை எட்டியது. அந்தச் சூழலில், வங்கதேசத்தின் சிறுபான்மை சமூகமான இந்துக்கள் பல இடங்களில் தாக்குதல்களுக்கு உள்ளானதாக தகவல்கள் வெளியாகின. வீடுகள் மற்றும் கடைகள் சேதப்படுத்தப்பட்டதும், கோவில்கள் தாக்கப்பட்டதும், சிலர் உயிரிழந்ததும் குறித்து மனித உரிமை அமைப்புகள் கவலை தெரிவித்தன. சில அறிக்கைகளின் படி, ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு குறுகிய காலத்திலேயே ஆயிரக்கணக்கான தாக்குதல் சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
அதேசமயம், இந்த வன்முறைகள் அரசியல் பழிவாங்கலின் ஒரு பகுதியாகவும் பார்க்கப்பட்டன. குறிப்பாக, முன்னாள் ஆளும் கட்சியான அவாமி லீக்கை ஆதரித்தவர்களாக கருதப்பட்ட இந்துக்கள் குறிவைத்து தாக்கப்பட்டதும் பலர் உயிரிழந்ததும் ஜனநாயகத்தையும் மத ஒருமைப்பாட்டையும் ஏற்றுகொண்ட வங்கதேசத்தின் அரசியல் பலவீனமாகப் பார்க்கப்பட்டது. இதனால், வங்கதேசத்தில் சிறுபான்மை பாதுகாப்பு, மதச்சார்பற்ற அரசியல் மற்றும் சட்ட ஒழுங்கு மீதான நம்பிக்கை ஆகியவை முக்கிய விவாதங்களாக மாறின.
இந்த பின்னணி, ஆலம்கீர் தலைமையில் உருவாகும் புதிய அரசியல் கட்டமைப்புக்கு ஒரு சவாலாகவே பார்க்கப்படுகிறது.
கருத்துகள் (0)
ஏற்றுகிறது…
