நேரலை
/
NFNEWSFELT
இலக்கியம்

ஒடிஸி - இலியட் - சிலப்பதிகாரம் - மணிமேகலை - ஒரு சுவாரசியாமான ஒப்பீடு

நூற்றுக்கணக்கான அக்கில்லஸ்களும் ஒடிசிகளும் நம்ம பாண்டிய சோழ மன்னர்களின் மெய்க்காவல் படையில் ஊழியம் செய்தது வரலாறு.

Newsfelt Admin19 ஜூலை, 202614 நிமிட வாசிப்பு
பகிர்:

- செந்தில்குமரன்

'கிரேக்கம் ரோமானியம் வரலாறு கலாச்சாரம் எல்லாம் எவ்வளவு பெருசு தெரியுமா? கிரேக்கத்தைப் பார்; ஏதென்ஸ் நகரத்து எழில் வீதிகளைப் பார் .. தெருவோரத்து வீடுகளைப் பார்.. வீட்டோரத்து திண்னைகளைப் பார். திண்ணைப் பக்கம் தென்னை மரங்களைப் பார். பக்கத்துல கிடக்கிற தொன்னையைப் பார்...

அதுக்கு முன்னாடி தமிழக வரலாறு கலாச்சாரம் எல்லாம் ஒண்ணுமே இல்லை..' என்ற ரீதியில் மூச்சு முட்ட முக்கி முக்கி முழங்குகிறார்கள். இதெல்லாம் உண்மை தானா?

முதலில் ஒடிஸி, அதன் அண்ணன் இலியட்.. இந்தக் காவியங்களின் ஆதி வரலாறு அல்லது கதையைப் பார்த்து விடுவோம்.

கிரேக்கக் கடவுளான ஜீயஸ், ஸ்பார்ட்டா நாட்டு அரசர் டிந்தாரியசின் மனைவியான லேடாவை , அன்னப்பறவை வடிவத்தில் வந்து மேட்டர் பண்ணி விடுகிறார். (தொயரத்த ) . அதே நாளில் அவள் தன் கணவனோடும் மேட்டர் செய்கிறாள்.

அதனால் அவள் ரெண்டு முட்டை போடுகிறாள் (கிண்டல் பண்ணலீங்க. முட்டையேதான்) .ஒரு முட்டை கடவுளின் விந்துவுக்கு. ஒரு முட்டை கணவனின் விந்துவுக்கு.

கடவுள் பறவை வடிவில் வந்து கூடியதால் கணவனின் விந்துக்கும் முட்டையே உருவாகிறது.

கடவுளின் விந்தில் உருவான முட்டையில் இருந்து ஹெலன் என்ற பெண்ணும் பொல்லக்ஸ் என்ற பையனும் பிறக்கிறார்கள்.கணவனின் விந்தில் இருந்து உருவான முட்டையில் காஸ்டர் என்ற மகனும் கிளைடெம்னெஸ்ட்ரா என்ற மகளும் பிறக்கிறார்கள்.

மேற்படி கிரக்கக் கடவுளின் விந்தை விட, கணவனின் விந்துதான் ஸ்ட்ராங் போல. அரசி லேடா போட்ட முதல் முட்டையில் இருந்து பிறந்த காரணத்தால் கிளைடெம்னெஸ்ட்ரா மூத்தவள்.

ஸ்பார்ட்டாவைவிட செழிப்பான நாடான மைசீனே நாட்டின் அரசனான அகமெம்னான் அவளை கல்யாணம் செய்து கொண்டு போய்விடுகிறான்.

டிந்தாரியஸ் உயிரோடு இருக்கும்போதே, மகன்களான காஸ்டர் மற்றும் பொல்லக்ஸ் இருவரும் ஒரு போரில் இறந்து விடுகின்றனர்.

ஆகவே மூத்த மருமகன் அகமெம்னான் வசம் ஸ்பார்ட்டாவின் அரச உரிமை போக வேண்டும். ஆனால் அவனோ மைசீனேவின் அரசனாக இருப்பதே பெஸ்ட் என்று நினைத்தான்.

.அதனால் இளைய மகள் ஹெலனை மணப்பவன், ஸ்பார்ட்டா சாம்ராஜ்யத்தின் அரசன் ஆகலாம் என்பதால் குறுநில மன்னர்கள் எல்லோரும் அதற்கு ஆசைப்படுகிறார்கள். ஆனால் டிந்தாரியஸுக் கு பயம் .

ஒருவனுக்கு திருமணம் செய்து கொடுத்தால் அப்புறம் மற்றவர்கள் எல்லோரும் கோபப்படுவார்களே என்று ... சேச்சே அப்படி இல்லை .. அப்படி இல்லை. ..

மாதவியின் இசையில் மயங்கிக் கிடக்கும் கோவலன். தமிழ்நாட்டின் கோயில் சிற்பம்


'சுயம்வரம் நடக்கும் . சுயம்வரத்தில் வெற்றி பெறும் மன்னனை ஹெலன் மணப்பாள். அதன் பிறகு 'அவளை வேறு யாரும் தொந்தரவு செய்ய மாட்டோம். தவிர பேரரசுக்கும் என்றும் பாதுகாப்பாக இருப்போம்' என்று ஒப்புக் கொள்ள வேண்டும் .அப்படி ஒப்புக் கொள்பவர்கள்தான் . சுயம்வரத்தில் கலந்து கொள்ள முடியும் என்கிறான்.

எல்லோரும் ஒப்புக் கொள்ள சுயம்வரம் நடக்கிறது. அக்கா புருஷன் சொன்னபடி அகமெம்னானின் தம்பியான மெனிலாஸை ஹெலன் மணந்து கொள்கிறாள்.

இப்படி ஒரு சுயம்வர ஐடியாவை டிந்தாரியாஸுக்கு கொடுத்த சிற்றரசன்தான்... ஒடிசியஸ்! இத்தகா தீவின் அரசன்.

ஹெலனுக்கும் மெனிலாசுக்கும் குழந்தைகள் பிறக்கின்றன

இப்பதான் வருது அடுத்த வில்லங்கம்!

கிரேக்கக் கடவுள்களின் ராணி மற்றும் அதிகாரத்தின் கடவுள்ஹீரா. ஞானம் மற்றும் போர்க்கலையின் கடவுள் அத்தீனா. அன்பு, அழகு மற்றும் காதலின் கடவுள் அப்ரோடைட்.

இவர்கள் மூவருக்குள்ளும் யார் யார் பெரிய அழகி என்று போட்டி.வந்து, தீர்ப்பு சொல்லும் வேலை டிராய் இளவரசன் பாரிஸ் என்பவனிடம் கொடுக்கப்படுகிறது.

தங்களையே தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதற்காக, அந்த மூன்று கிரேக்கப் பெண் கடவுள்களும் பாரிஸுக்கு லஞ்சம் கொடுக்க முன்வருகின்றனர்

'உன்னை மாபெரும் பேரரசன் ஆக்குவேன் 'என்றது ஹீரா.. 'போர்க்களத்தில் உன்னை எவராலும் வெல்ல முடியாத மாபெரும் வீரன் ஆக்குவேன்' என்றது அத்தீனா..'

'உலகிலேயே மிக அழகான பெண்ணான ஸ்பார்ட்டா நாட்டு ராணிஹெலனை உனக்கு மனைவியாக்குவேன் " என்று ஹெலனைப் பற்றிக் கூறி ஜில்தட்ட வைத்தது அப்ரோடைட். ஹெலனுக்கு முன்பே குழந்தைகள் இருக்கின்றன.

பாரிஸ் பயபுள்ள பெரிய ஜொள்ளு பார்ட்டி. ஸ்பார்ட்டா நாட்டுக்கு அரசுமுறைப்பயணமாக வந்த பாரிஸ் ஹெலனை தூக்கிக் கொண்டு போய்ட்டான். (கிரேக்கப் பெண் கடவுள்கள் என்ன வேலை பண்ணி இருக்கு பாருங்க.)

அரசு முறைப்பயணம்னாலே ... சரி, வேணாம் விடுங்க.

சுயம்வர சமயத்தில் போட்டுக் கொண்ட ஒப்பந்தப்படி இப்போது ஹெலனை மீட்டுக் கொண்டுவர வேண்டிய கடமை ஒடிசியஸ் முதலிய சிற்றசர்களுக்கு வருகிறது. .

அப்படி டிராய் நகரத்தின் மீது போர் தொடுத்து ஹெலனை மீட்டுக் கொண்டு வர, ஒடிசியஸ் முதலிய சிற்றசர்களுடன் கிளம்பிய இன்னொரு சிற்றரசன்தான், பதியா என்ற நாட்டை ஆண்ட அரசன் அக்கில்லஸ் .

டிராய் நகரத்தில் நடந்த போரில் அக்கில்லஸ் மரணம் அடைவது வரையான கதைதான் இலியட் காவியம்.. இலியட் என்பது டிராய் நகரத்தின் இன்னொரு பெயர்.

ஹெலனை மீட்க போருக்கு போகும்போது ஒடிசியசுக்கு கல்யாணம் ஆகி பெனிலோப் என்ற மனைவியும் டெலிமாக்கஸ் என்ற மகனும் இருந்தார்கள். மனைவியோடு நிம்மதியாக வாழ விரும்பிய ஒடிசியஸுக்கு போருக்கு போவதில் விருப்பமில்லை. ஆனால் டிந்தாரியாஸுக்கு சுயம்வர ஒப்பந்த ஐடியா கொடுத்ததே இந்த பயபுள்ளைதானே. எப்படி போகாமல் இருக்க முடியும்?

ஆனாலும் போருக்கு அழைப்பு வந்தபோது, தப்பிக்க நினைத்த ஒடிசியஸ் பைத்தியம் பிடித்தது போல நடித்தான். வயலில் உப்பைக் கொட்டி மாடுகளுக்குப் பதிலாகக் கழுதையைப் பூட்டி உழுது எல்லாம் சீன் போட்டான். . ஆனால் அவனது குழந்தையை, ஏரின் முன்னால் கிடத்த, "ஐயோ என் புள்ள..." என்று , ஏர்க்கலப்பையை நிறுத்தி அலற அம்பலப்பட்டான் ஒடிசியஸ்

வேறு வழி இன்றி போருக்குப் போனான்

ஒடிசியஸை ஒப்பிடும்போது அக்கில்லஸ் வயதில் சின்னவன் . ஆனால் ஒடிசியஸை விடப் பெரும் வீரன்.

ஹெலனின் திருமணச் சபதத்தில் அகில்லெஸ் கையெழுத்திடவில்லை. அப்போது அவன் சிறுவன். எனவே ஹெலனை மீட்க வேண்டிய எந்தக் கடமையும் அவனுக்கு இல்லை. ஆனாலும் பேரரசுக்கு ஏற்பட்ட களங்கத்தைத் துடைக்க போருக்கு கிளம்பினான் அகில்லெஸ் .

டிராய் போருக்குச் சென்றால் இறந்துவிடுவான் என்று பயந்த அவனது தாய் தீட்டிஸ் , மகனைக் காப்பாற்ற, அரசவையில் பெண்களோடு பெண்ணாக மாற்று உடையில் ஒளித்து வைத்தார். இவனைக் கண்டுபிடித்துத் தந்திரமாகப் போருக்கு அழைத்து வந்ததே ஒடிசியஸ் பயபுள்ளதான்.

எனினும் போருக்கு வர முடியாது என்று அக்கில்லஸ் சொன்னால் யாரும் மறுக்க முடியாது. அகில்லெஸுக்கு இரண்டு தேர்வுகள் இருந்தன: ஒன்று, போருக்குப் போகாமல் நீண்ட காலம் அமைதியாக வாழ்ந்து மடிவது. இரண்டு, டிராய் போருக்குச் சென்று இளம் வயதிலேயே இறந்து வரலாற்றில் அழியாப் புகழ் பெறுவது.

தமிழ் அரசர்கள் பாணியில் வரலாற்றில் அழியாத புகழைப் பெறுவது என்ற முடிவோடு போருக்குப் போன மாவீரன் அக்கில்லஸ் .

போலவே டிராய் நகரில் நடந்த போரில் வீர மரணம் அடைகிறான் அக்கில்லஸ். . அதை பற்றிய ஹோமர் முதலில் எழுதிய காவியம்தான் இலியட்.

அக்கில்லஸ் இறந்த நிலையில், ஒரு சின்னப்பயலை இப்படி கொண்டு வந்து கொன்னுட்டமே என்ற குற்ற உணர்ச்சியில் புத்தி பேதலித்து பத்தாண்டு போராடி, ஒடிஸியஸ் நாடு திரும்பியதாக ஹோமர் இரண்டாவது எழுதிய காப்பியம்தான் ஒடிஸி . அந்த ஒடிஸி கதைதான் நீங்கள் இப்போது திரையில் பார்க்கும் ஒடிஸ்ஸி.

எனவே தான் இலியட் ஒடிசி இரண்டையும் இரட்டைக் காப்பியங்கள் என்பார்கள்.

துறவறம் பூண்ட சேர இளவரசன் இளங்கோ - அரசு வெளியிட்ட அதிகாரபூர்வ கோட்டுச் சித்திரம்


நம்மிடமும் இரட்டைக் காப்பியங்கள் உண்டு. சிலப்பதிகாரம் , மணிமேகலை.

நம்ம தமிழ் இரட்டைக் காப்பியங்களில் கடவுள் யாரும் இன்னொருவன் பொண்டாட்டியை தூக்கிக் கொண்டு போய் பிள்ளை கொடுக்கவில்லை.

கண்ணகி பிறந்த சோழ நாட்டு ராணியோ அவள் எரித்த பாண்டிய நாட்டு ராணியோ முட்டை போடவில்லை. பிள்ளைதான் பெற்றார்கள்.

கண்ணகி மார்பைத் திருகி எறிந்து மதுரை எரிந்தது என்பது மட்டுமே விவாதத்துக்கு உரியது . அதுவும் மாய யதார்த்தவாதம் என்ற வகையில் கண்ணகியின் கோபம் என்ற உணர்வின் உருவமாகவே பார்க்கப்படுகிறது.

நமது இலக்கியங்கள் சிலப்பதிகாரக் காலத்திலேயே புகழ்பெற்ற வணிகர்களின் பிள்ளைகளுக்கு திருமணம் என்று மனிதம் பேசியது.

கணிகையர் குலத்தில் பிறந்தாலும் கோவலனுக்குப் பிறகு இன்னொருவரை தீண்ட விடாமல் துறவு பூண்டாள் மாதவி என்று காதலின் புனிதம் பேசியது.

கோவலன் மாதவிக்கு பிறந்த மணிமேகலையின் பெயரால் அமைந்த மணிமேகலைக் காப்பியம் பசிப்பிணி நீக்குவது பற்றி அன்றே பேசியது.

யாரிடம் பிச்சை வாங்க வேண்டும் என்று, கொடுப்பவரை யாசகம் கேட்பவர் தேர்ந்தெடுக்கும் அளவுக்கு, கொடைக் குணம் மக்களிடம் இருந்ததை பேசியது. (இடுவோர்த் தேர்ந்தாங்கிருப்போர் பலரால் வடுவாழ் கூந்தல் அதன்பால் போகென என்கிறார் ilango)

ஆனால் இலியட் ஒடிசி எழுதப்பட்டு பல நூற்றாண்டுகள் கழித்தே சிலப்பதிகாரம் எழுதப்பட்டது.

அந்த இடைப்பட்ட நூற்றாண்டுகளில் தமிழ்நாடு அல்லாத அன்றைய இந்தியப் பகுதிகளில் உருவான சம்ஸ்கிருத வடமொழி இலக்கியங்களை எல்லாம் பாருங்கள்.

புராண கடவுளர்கள் ராணிகளை தூக்கிப் போவார்கள். யார் சிறந்தவள் என்று பெண் தெய்வங்களுக்கு இடையே போட்டி வரும். வான்மீகி ராமாயணத்திலேயே ஏழு மரங்களை துளைக்கும் அம்புதான் அரக்கனை வீழ்த்த முடியும். வில்லை ஒடித்துதான் வீரன் என்று காட்டிட முடியும் . இவை எல்லாம் இலியட் ஒடிஸ்சியில் இருக்கின்றன. மகாபாரதத்தில் ஹோமர் இருக்கிறான். ஆக இந்த வடமொழி புராணங்கள் எல்லாம் ஹோமரைக் காப்பி அடித்தே உருவாயின.

அந்தக் கட்டுக்கதைகளை எல்லாம் தூக்கித் தூர எறிந்து விட்டு இந்த மண்ணில் உருவான முதல் மக்கள் இலக்கியம் தமிழில் உருவான சிலப்பதிகாரம். அடுத்து மணிமேகலை .

அதனால்தான் "யாமறிந்த புலவரிலே கம்பனைப் போல்,வள்ளுவர்போல், இளங்கோ வைப்போல்,பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை". என்று முடித்து விடாமல் ''உண்மை, வெறும் புகழ்ச்சியில்லை! '' என்று அழுத்தம் கொடுத்தான், பத்து மொழி கற்ற பாரதி.

கிரேக்க ஆதிக்கவி ஹோமர் கோட்டுச் சித்திரம்


அதன் பின்னர் ஆரிய ஆதிக்கத்தால் இங்கும் கட்டுக் கதைகள் வந்தன.

எப்படிப் பார்த்தாலும் இலியட் ஒடிசி வந்து சில நூற்றாண்டுகளுக்கு பிறகுதானே சிலப்பதிகாரம் வந்தது. அதில் என்ன பெருமை என்று கேட்கலாம். நியாயம்தான்.

ஆனால் அறிவுக்கு உதவாத மாய ஜால கட்டுக் கதைகளை நிரப்பி இலியட் ஒடிசி எழுதப்பட்ட காலத்தில் இங்கு உருவான தொல்காப்பியம்....

தமிழ் மொழியின் ஒலிகள், எழுத்துகளின் பிறப்பு, மாத்திரை அளவு மற்றும் புணர்ச்சி விதிகளை (எழுத்துகள் சேரும் முறை) விளக்குகிறது.

பெயர்ச்சொல், வினைச்சொல், இடைச்சொல், உரிச்சொல் ஆகிய நான்கு வகை சொற்களின் இலக்கணம் மற்றும் வாக்கிய அமைப்பைப் பற்றி பேசுகிறது.

உலக மொழிகளில் தமிழ் இலக்கணத்திற்கு மட்டுமே உரிய தனிச்சிறப்பாக , தமிழர்களின் அக வாழ்க்கை (காதல்) மற்றும் புற வாழ்க்கை (வீரம், சமூகம்) பற்றிய இலக்கணத்தை வகுத்துக் கூறுகிறது.

வெறும் மொழிக்கு மட்டும் இலக்கணம் கூறாமல், மனித வாழ்க்கைக்கு (பொருளதிகாரம் மூலம்) இலக்கணம் வகுத்த பெருமை கொண்டது.

தமிழர்களின் நிலப்பரப்பை குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐந்து திணைகளாகப் பிரித்து, அவற்றின் வாழ்வியலை விவரித்துள்ளது.

உயிரினங்களை ஓரறிவு முதல் ஆறறிவு (மனிதன்) வரை வகைப்படுத்திய புகழ்பெற்ற நூற்பா தொல்காப்பியப் பொருளதிகாரத்தில் தான் இடம் பெற்றுள்ளது.

பழிவரும் என்றால் பூமியே பரிசாகக் கிடைத்தாலும் ஏற்காதவன். புகழ் வரும் என்றால் உயிரை இழக்கவும் தயங்காதவன் தமிழன் என்கிறது. (ஆக, அப்போதே நம்மிடம் அக்கிலஸுக்கு அண்ணன்கள் நிறைய பேர் இருந்திருக்கிறார்கள்.)

"புதியன புகுதலும் பழையன கழிதலும் வழுவல கால வகையினானே .." மாபெரும் தத்துவத்தை அசால்ட்டாக சொல்கிறது.

"வாழ்க்கைன்னா நல்லதும் இருக்கும் கெட்டதும் இருக்கும் " என்று ஒரு சிறுவனால் சொல்ல முடியுமா? பல்லாண்டு காலம் வாழ்ந்த ஒரு மூத்த மனிதனால் தானே சொல்ல முடியும்?

பழைய விஷயங்கள் இல்லாமல் போவதும் புது விஷயங்கள் வருவதும் ஒண்ணும் தப்பு இல்ல. அது காலப் போக்கில் நடக்கிற விஷயம்தான்" என்று ஒரு தமிழ் நூல், இலியட் ஒடிசி உருவான காலத்திலேயே சொல்கிறது என்றால்,

அந்த இனமும் மொழியும் இலக்கியங்களும் அதற்கு முன்பு எத்தனை ஆண்டுகாலம் வாழ்ந்திருக்க வேண்டும்?

இப்படி எல்லாம் சொல்வதால் ஹோமரை இழிவு படுத்துவது எனது நோக்கமில்லை. மாபெரும் கற்பனாவாதி படைப்பாளி ஹோமர். தமிழை தவிர்த்து விட்டுப் பார்த்தால் உலக இலக்கியங்கள் பலவற்றுக்கு சோர்ஸ் அவன்தான். அவனை நினைத்தால் பிரம்மிப்பாக இருக்கும் .

ஆனால்...

ஒடிசி படத்தைப் பாராட்டுகிறேன் என்று

இந்தப் படத்தை வைத்தும் சிலர் தமிழ் வரலாறு இலக்கியம் இவற்றின் மீது எல்லாம் எள்ளல் தெளிக்கிறார்கள். அவர்களுக்கு ஒரு கட்டையைப் போடுவதே இந்தப் பதிவின் நோக்கம்.

நூற்றுக்கணக்கான அக்கில்லஸ்களும் ஒடிசிகளும் நம்ம பாண்டிய சோழ மன்னர்கலின் மெய்க்காவல் படையில் ஊழியம் செய்தது வரலாறு.

ஆகவே தம்பிக்களா ! கொஞ்சம் தூரமா போய் விளையாடுங்க.

பின் குறிப்பு : பட விமர்சனமா? அதான் பாக்கறவங்க எல்லாம் எழுதறாங்களே

நல்லாருக்கு . final mixing உட்பட சில விஷயங்கள் எல்லோரும் சொல்வது போல, கேவலமாகவே இருந்தாலும் உள்நாட்டு குப்பைகளுக்கு எவ்வளவோ மேல் .

இது போன்ற படங்களை பார்க்கும்போது முழுக்க புரிந்தால்தான் படத்தின் பொருளடக்கக் கம்பீரம் விளங்கும்.

ஐமாக்சில் பார்த்தேன் என்று பீத்திக் கொள்வதற்காக ஆங்கிலத்தில் பார்த்து ரகசியமாக மண்டை சொறிவது வேஸ்ட்.

இந்தப் படத்தை இந்தியாவில் அகமதாபாத் தவிர வேறெங்கும் படம் பிடிக்கப்பட்ட தரத்தில் பார்க்க முடியாது.

நான் தமிழில்தான் பார்த்தேன். மில்லி மீட்டர் விடாமல் ரசிக்க முடிந்தது.


- செந்தில்குமரன்

கட்டுரையாளர், மூத்த பத்திரிகையாளர், எழுத்தாளர் மற்றும் வளர்ந்து வரும் குணச்சித்திர நடிகர்.

பகிர்:

கருத்துகள் (0)

கருத்திட உள்நுழையுங்கள்.

ஏற்றுகிறது...

தொடர்புடைய கட்டுரைகள்