நேரலை
/
NFNEWSFELT
சினிமா

ராஜ்குமார் பெரியசாமி: தேசிய விருது வென்றது இப்படித்தான்!

தனுஷின் 55வது படத்தை இயக்கிவரும் ராஜ்குமார் பெரியசாமி, அதில் நடிப்புக்காக இம்முறை சிறந்த நடிகர் விருதுபெறும் மம்மூக்கா என்று ரசிகர்களால் செல்லமாக அமைக்கப்படும் மம்மூட்டியும் மிக முக்கிய கதாபாத்திரம் ஏற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத் தக்கது.

NewsFelt Admin 29 ஜூலை, 20265 நிமிட வாசிப்பு
பகிர்:

மறைந்த தமிழக ராணுவ வீரர், அசோக் சக்ரா விருது பெற்ற மேஜர் முகுந்த் வரதராஜனின் வீர வரலாற்றை மையமாகக் கொண்டு உருவான 'அமரன்' திரைப்படம், இந்தியத் திரைத்துறையின் உயரிய அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது. 2024-ஆம் ஆண்டு வெளியான திரைப்படங்களுக்கான 72-வது தேசிய திரைப்பட விருதுகளில், ஒட்டுமொத்த இந்திய அளவில் 'சிறந்த இயக்குநர்' (Best Director) என்ற பெருமைமிக்க விருதை இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி வென்று சாதனை படைத்துள்ளார்.

இப்படத்திற்குப் பலத்த போட்டி நிலவிய போதிலும், அனைத்து மொழிகளையும் கடந்து ஒட்டுமொத்த சிறந்த இயக்கத்திற்கான விருதை ராஜ்குமார் பெரியசாமி தட்டிச் சென்றுள்ளார்.

பொறுப்புடன் செதுக்கப்பட்ட 'அமரன்'

மேஜர் முகுந்த் வரதராஜனின் வீரமரணம் உருவாக்கிய அதிர்வுகள் செய்திகளோடு முடிந்துபோய்விட வில்லை என்பதை உணர்த்தியது ராஜ்குமார் பெரியசாமியின் திரைக்கதை ஆக்கம். முகுந்தின் தனிப்பட்டக் குடும்ப வாழ்க்கை, அவரது ராணுவ வாழ்க்கை ஆகிய இரண்டு அடுக்குகளில் அமைந்த அத்தியாயங்களுக்குள், ஷிவ் அரூர் - ராகுல் சிங் இணைந்து எழுதிய ‘India’s Most Fearless: True Stories of Modern Military Heroes’ என்கிற நூலின் வீரம் செறிந்த நிகழ்வுகளைக் காட்சிகளாக உருமாற்றிப் பொருத்திய விதம் அபாரம்! ராணுவத் தாக்குதல்கள், பிரச்சினைக்குரிய நிலத்தின் பதற்றமான வாழ்க்கை ஆகியன காட்சியாக்கப்பட்ட விதம், முதன்மைத் துணை நடிகர்களின் உயிர்ப்பு மிக்க நடிப்பு ஆகிய அம்சங்கள், தமிழுக்கு ஓர் அசலான ராணுவ சினிமாவைக் கொண்டு வந்து சேர்த்தன.

ஒரு வாழ்க்கை வரலாற்றுப் படம் எடுப்பது என்பது அத்தனை எளிதான காரியம் அல்ல, குறிப்பாகத் தேசத்திற்காகத் தன் உயிரைத் தியாகம் செய்த ஒரு ராணுவ வீரரின் கதையைத் திரையில் கொண்டு வரும்போது இயக்குநருக்குப் பொறுப்பு இரட்டிப்பாகிறது. ராஜ்குமார் பெரியசாமி அந்தப் பொறுப்பை மிக நேர்த்தியாகக் கையாண்ட விதம் தான் இந்த தேசிய விருதுக்கான அடித்தளம்.


உண்மையின் பக்கம் நின்ற எழுத்து:

மேஜர் முகுந்தின் அசல் வாழ்க்கை மற்றும் ராணுவ ஆவணங்களை ஆழ்ந்து ஆராய்ந்து, எவ்வித சினிமாத்தனமான மிகைப்படுத்தல்களும் இன்றி, யதார்த்தமான போர்க்களக் காட்சிகளை அவர் அமைத்திருந்தார்.

'அமரன்' படத்தை வெறும் துப்பாக்கிச் சண்டைப் படமாக மட்டும் சுருக்கிவிடாமல், ஒரு ராணுவ வீரரின் குடும்பப் பொருளாதாரச் சிக்கல்கள், அவரது மனைவி இந்து ரெபக்கா வர்கீஸின் காதல் மற்றும் தியாகம் ஆகியவற்றை நெஞ்சை உலுக்கும் வகையில் உணர்வுபூர்வமாகச் செதுக்கியிருந்தார் ராஜ்குமார் பெரியசாமி.


அசாத்திய உழைப்பு:

காஷ்மீரின் நிஜமான லொகேஷன்களுக்குச் சென்று, சவாலான காலநிலையிலும், ராணுவத்தின் முழு ஒத்துழைப்போடும் காட்சிகளைப் படமாக்கிய விதம் அவரது அபார இயக்கத் திறமையைக் காட்டுகிறது. இந்த தேசிய விருது ஏன் முழு தகுதியானது?

ஒரு இயக்குநராக நடிகர்களிடம் இருந்து சிறந்த நடிப்பை வாங்குவதிலும், தொழில்நுட்பக் கலைஞர்களைச் சரியாக வழிநடத்துவதிலும் ராஜ்குமார் பெரியசாமியின் இயக்கம் 'அமரன்' படத்தில் உச்சம் தொட்டது.

சிவகார்த்திகேயனை ஒரு சாக்கலேட் பாயிலிருந்து கம்பீரமான மேஜர் முகுந்தாகவும், சாய் பல்லவியை உணர்வுபூர்வமான இந்துவாகவும் அவர் மாற்றிய விதம் அற்புதம். போர்க்களத்தின் விறுவிறுப்பு, ஒருபுறம் நாட்டுப்பற்றை விதைத்து, மறுபுறம் கண்ணீர் வரவழைக்கும் இறுதிக்காட்சியை இயக்கிய விதம் எனப் படத்தின் ஒவ்வொரு பிரேமிலும் இயக்குநரின் முத்திரை தெளிவாகத் தெரிந்தது.

அதிலும் குறிப்பாக, 'அமரன்' திரைப்படம் இந்த தேசிய விருதுகளில் சிறந்த பின்னணி இசை (ஜி.வி. பிரகாஷ் குமார்) மற்றும் சிறந்த படத்தொகுப்பு (ஆர். கலைவண்ணன்) ஆகிய மேலும் இரண்டு முக்கியப் பிரிவுகளிலும் விருதுகளை அள்ளியுள்ளது. ஒரு கேப்டனாக ஒட்டுமொத்த தொழில்நுட்பக் குழுவையும் ஒருங்கிணைத்து, உலகத் தரத்திலான ஒரு படைப்பைத் தந்ததற்காகவே இந்த 'சிறந்த இயக்குநர்' விருது ராஜ்குமார் பெரியசாமிக்கு நூறு சதவீதம் தகுதியானது.


"நாங்கள் படத்தை எடுக்கும்போது தேசிய விருதை எதிர்பார்க்கவில்லை. ஆனால், மேஜர் முகுந்தின் அம்மா என்னிடம் 'உனக்கு இந்த படத்திற்காக நிச்சயம் தேசிய விருது கிடைக்கும்' என்று வாழ்த்தினார். இன்று அது உண்மையாகியுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது." என்று தேசிய விருது வென்ற பின் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி நெகிழ்ச்சியுடன் தெரிவித்திருக்கிறார்.

300 கோடிக்கும் மேல் வசூல் செய்து பிளாக்பஸ்டர் அடித்ததோடு மட்டுமல்லாமல், பல இளைஞர்களை ராணுவத்தில் சேரத் தூண்டும் உந்துசக்தியாகவும் மாறிய 'அமரன்' திரைப்படத்திற்கும், அதன் கேப்டன் ராஜ்குமார் பெரியசாமிக்கும் கிடைத்துள்ள இந்த தேசிய அங்கீகாரம் தமிழ் சினிமாவிற்குப் பெருமை சேர்க்கும் ஒரு வரலாற்றுத் தருணம்!

தனுஷின் 55வது படத்தை இயக்கிவரும் ராஜ்குமார் பெரியசாமி, அதில் நடிப்புக்காக இம்முறை சிறந்த நடிகர் விருதுபெறும் மம்மூக்கா என்று ரசிகர்களால் செல்லமாக அமைக்கப்படும் மம்மூட்டியும் மிக முக்கிய கதாபாத்திரம் ஏற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத் தக்கது.

பகிர்:

கருத்துகள் (0)

கருத்திட உள்நுழையுங்கள்.

ஏற்றுகிறது...

தொடர்புடைய கட்டுரைகள்

ராஜ்குமார் பெரியசாமி: தேசிய விருது வென்றது இப்படித்தான்! | NewsFelt | NewsFelt