/
NFNEWSFELT
விமர்சனம்

ராம் லீலா விமர்சனம்

காதலையும் அறிவியல் புனைவையும் இணைக்கும் தமிழ் சினிமா முயற்சிகள் அரிதினும் அரிது. அதை கையிலெடுத்த ராம் லீலா டீம் சிக்ஸர் அடித்ததா?

Newsfelt Admin21 ஆகஸ்ட், 20267 நிமிட வாசிப்பு25 பார்வைகள்
பகிர்:

(சிறிய அளவில் ஸ்பாய்லர்கள் உள்ளடங்கியது. எனினும் கதை முழுமையாக வெளிப்படுத்தப்படவில்லை. வாசிப்பதும் தவிர்ப்பதும் உங்கள் விருப்பம்)

காதல், சூழல் நகைச்சுவை (சில இடங்களில் அடல்ட் நகைச்சுவையும் தூவப்பட்டுள்ளது), அறிவியல் புனைவு - இந்த மூன்றையும் ஒன்றாகக் கலக்க முயலும் திரைப்படங்கள் தமிழில் அரிது. அதேபோல் மனிதக் கதாபாத்திரங்களும் வேற்றுக்கிரகவாசி கதாபாத்திரங்களையும் தமிழில் முயன்ற முதல் படம் என்றால் அது ‘அயலான்’. இப்போது ‘ராம் லீலா’. அந்த முயற்சியில்தான் இயக்குநர் ராமச்சந்திரன் கண்ணன் இயக்கிய ‘ராம் லீலா’ திரைப்படத்தைச் சராசரிக்கும் சற்று மேலே கவனத்தை ஈர்க்க வைக்கிறது.

30 வயதைக் கடந்தும் திருமணம் ஆகாத இளைஞன் ராம்( ரியோ), அவரது காதல் தேடல் , அதற்குள் நுழையும் ஒரு அசாதாரண ஆனால் அழகான பெண்ணும் அவளின் குடும்பமும் என இந்தப் படம் கொண்டுள்ள தொடக்கும் மையத் திருப்பமும் நிமிர்ந்து உட்கார வைக்கின்றன. ஆனால், படத்தின் தொடக்கம் பல படங்களில் பார்த்துப் பழக்கப்பட்ட ஒரு ரொமான்டிக் காமெடி தளத்தில் சின்னச் சின்ன சிரிப்புகளோடு நம்மை இழுத்துச் செல்கிறது. ஆனால், திரைக்கதையில் இந்த மென்மையான தொடக்கப் பயணம் திடீரென ஒரு வித்தியாசமான ‘டாப் கியர்’ திருப்பத்தில் வேகமெடுக்கிறது. அறிவியல் புனைவையும் காதலின் உணர்வையும் இணைக்கும் அந்தத் திருப்பமும் அதில் கதாநாயகி மற்றும் அவரது குடும்பத்துக்கு இயக்குநர் தரும் சுவாரசியமான, நம்ப வைக்கும் அனிமேஷன் பின்னணியும் படத்தை மனத்தடங்கள் இன்றி தொடர வைக்கிறது. அந்த வகையில் இது தனித்த அடையாளத்துடன் தமிழில் வெளிவந்திருக்கும் ஒரு புதிய முயற்சி என்பதில் சந்தேகமில்லை.

ரியோ ராஜ் நடித்திருக்கும் ராம் கதாபாத்திரம், இன்றைய நகர இளைஞர்களின் மனநிலையைப் பிரதிபலிக்கிறது. காதல் தேடலில் தோல்வி அடையும் அவனது முயற்சிகள், குடும்பத்தின் அழுத்தம்—இவை அனைத்தும் சிரிப்பூட்டும் தருணங்களாகவே முதல் பாதியில் நகர்கின்றன. உள்ளூர் மின்சாரத் தொடர் வண்டியில் லீலாவை (வர்ஷிகா) சந்திக்கும் தருணத்திலிருந்து கதைக்கு வேகம் கிடைக்கிறது. வர்ஷிகா சென்னையில் வாழும் ஒரு ஜெயின் குடும்பத்தைச் சேர்ந்தவர். அவரது நிறம், கண்கள், தோற்றம் எல்லாமே அவரது கதாபாத்திரத்துக்கு நன்றாகப் பொருந்தியிருக்கிறது. கதாநாயகியைத் தேர்வு செய்த விதம் படத்துக்கு பலம். வர்ஷிகா, லீலாவாக, அமைதியான கவர்ச்சியுடன் திரையில் தோன்றுகிறார், பின்னர் தன்னுடைய காதலைக் காப்பாற்றிக்கொள்ளப் போராடும் காட்சிகளில் நன்றாகவே நடித்திருக்கிறார். “மாலை 6 மணிக்குப் பிறகு என்னை வீட்டில் எங்கேயுமே விடமாட்டார்கள் என அவர் கூறுவதற்கான காரணத்தை நாம் அறியும்போதுதான் அந்த அறிவியல் புனைவின் மர்மம் வெளிப்பட்டு, இனி இந்தப் படத்தில் காண என்ன இருக்கப் போகிறது என்கிற எண்ணத்தைப் படம் தருகிறது.

இடைவேளைக்குப் பிறகு கதை எடுக்கும் இந்தத் திருப்பமே இந்தப் படத்தின் பலமும் பலவீனமும் ஆகிறது. லீலாவும், அவளது குடும்பமும் வேற்றுக் கிரகவாசிகள், தவிர, மாலை நேரத்திற்குப் பிறகு லீலாவுக்கு ஏற்படும் மாற்றம் என்ற கருத்தாக்கம், தமிழ் சினிமாவில் அரிதாக முயலப்பட்ட ஒன்று. திரைக்கதையின் முக்கியத் திருப்பத்துடன் இந்த இரண்டாவது திருப்பம் அறிவியல் புனைவுக் களத்தில் இரண்டாம் பாதிப் படத்தை மேலும் சுவாரசியமாக நடத்திச் செல்கிறது. அதேநேரம், இந்த இரண்டாம் திருப்பம் கதைக்குத் தனித்தன்மை கொடுத்தாலும், திரைக்கதை அதை முழுமையாகவும் சீராகவும் கையாள்வதில் இயக்குநர் இன்னும் கூடுதலாக ‘இன்புட்’களைப் பெற்று திரைக்கதை வலிமையாக்கியிருக்கலாம். இந்த போதாமையே இரண்டாம் பாதிப் படத்தின் சில இடங்களில் கதையின் ஓட்டத்தைத் தடுமாறச் செய்கிறது.

சூழல் நகைச்சுவை இப்படத்தின் முக்கிய அம்சம். ரியோ அதை உணர்ந்து தன் உடல்மொழியில் ஒரு நவீன வைகைப் புயலைக் கொண்டு வர முயன்றுள்ளார். குறிப்பாகக் கிராமத்தில் ராமின் மாமா வீட்டில் நடக்கும் திருமணக் காட்சிகள், குழப்பமான சூழ்நிலைகள், கதாபாத்திரங்களின் அதிரடி எதிர்வினைகள், ஆகிய நன்றாகவே நன்றாகவே சிரிக்க வைக்கின்றன. முனிஷ்காந்த், சூப்பர் சுப்பராயன் போன்ற துணை நடிகர்கள் சுவாரஸ்யமான நிமிடங்களை உருவாக்கிவிடுகிறார்கள். அதே சமயம், சில நகைச்சுவை ஐடியாக்கள் மீண்டும் மீண்டும் பயன்படுத்தப்படும் ‘கேக்’களாக மாறி சோர்வூட்டுகின்றன. இந்த சீரற்ற தன்மையே புதிய கதைக்களத்தில் பயன்படுத்தப்படும் சூழல் நகைச்சுவையின் தாக்கத்தைச் சற்றே குறைக்கிறது.

ரியோவின் காமெடி டைமிங் பல இடங்களில் வேலை செய்கிறது. ஆனால், அவரது கதாபாத்திரம் எப்போதும் அதிக சத்தத்துடன் உலா வருகிறது. எனக்கு இந்த உணர்வு ஏற்பட்டது. சிலருக்கு அது தோன்றாமலும். லீலாவாக வரும் வர்ஷிகா ஜெயின் மிகவும் கட்டுப்படுத்தப்பட்ட நடிப்புடன் ஒரு இனிய சூழலை ‘ராம் லீலா’ உலகில் உருவாக்கி விடுகிறார். ராமின் தங்கையாக வரும் தீபா வெங்கட், இவர்களின் பெற்றோரான சேத்தன், மாளவிகா அவினாஷ், ராமின் நண்பனாக வரும் பாலாஜி தியாகராஜன் தயாளன் ஆகியோர் ‘ராம் லீலா’வின் உலகைத் தங்கள் நடிப்பால் கட்டமைப்பதில் பெரும் பங்கு வகித்திருக்கிறார்கள்.

இயக்குநர் ராமச்சந்திரன் கண்ணன், வழக்கமான ரொமான்டிக் காமெடியில் ஒரு வித்தியாசமான, புதுமையான அறிவியல் புனைவு ஐடியாவை சேர்க்க முயன்று அதில் 80 விழுக்காடு வெற்றிபெற்றுவிடுகிறார். அதன் மூலம் அவர் பாராட்டுக்குரியவர். ஆனால், இந்தப் புதுமையை ஒரே சீராகக் கொண்டு செல்லும் திரைக்கதையில் அவர் இன்னும் உழைத்திருந்தால் கிளைக் கதைகளில் இன்னும் சுவாரசியம் கூடியிருக்கும். எனினும், இரண்டாம் பாதியின் இறுதிப் பகுதியில் கதை மீண்டும் சுறுசுறுப்பைப் பெற்றுவிடுகிறது. குறிப்பாகக் கடைசி அரைமணி நேரம், எதிர்பாராத திருப்பங்களால் விறுவிறுப்பாக மாறுகிறது.

தொழில்நுட்ப ரீதியாக படம் நிறைவு தரக்கூடியதாக உள்ளது. வண்ணமயமான ஒளிப்பதிவு, மென்மையான இசை ஆகிய அனைத்தும் படத்தின் தங்கு தடையிட்ட ஓட்டத்துக்கு ஏற்றவையாக இருக்கின்றன. காதல் காட்சிகளில் நாயகன்-நாயகியின் இணைவும் இணக்கமும் நன்றாகவே வேலை செய்திருக்கிறது.

மொத்தத்தில், ‘ராம் லீலா’ ஒரு பாதுகாப்பான ரொமான்டிக் நகைச்சுவையாகத் தொடங்கி, துணிச்சலான அறிவியல் புனை திருப்பத்துடன் வேறுபட முயலும் தமிழ்ப்பட முயற்சி. அந்த முயற்சி முழுமையாக வெற்றி பெறவில்லை என்றாலும், அசலான சிரிப்பூட்டும் தருணங்கள், புதுமையான கதைக்கரு, மற்றும் இறுதிப் பகுதிகளில் கிடைக்கும் விறுவிறுப்பு இவற்றால் இப்படத்தை மனத்தடையின்றிக் குடும்பத்துடன் கூட ‘ஒருமுறை பார்க்கலாம்’ என்ற தகுதியை ராம் லீலா பெற்றுவிடுகிறது.

மதிப்பெண் 3.3/5

ஐந்து பேர் கொண்ட நியூஸ் ஃபெல்ட் குழுவினரின் விமர்சனம் முதன்மை ஆசிரியர் சோழ யாழினியால் தொகுக்கப்பட்டுள்ளது.

#RamLeela #RamLeelaReview #TamilMovieReview #Kollywood #RioRaj #VartikaJain #RomCom #SciFiTamil #TamilCinema

பகிர்:

கருத்துகள் (0)

கருத்திட உள்நுழையுங்கள்.

ஏற்றுகிறது…

தொடர்புடைய கட்டுரைகள்