மனித உரிமை மீறல் வழங்குகள் மீது உச்ச நீதிமன்றம் புதிய அணுகுமுறை!
உயிர், சுதந்திரம் மற்றும் பிற அடிப்படை உரிமைகள் தொடர்பான அவசர வழக்குகள நீதிமன்ற நேரத்தைத் தாண்டியும் விசாரிக்க, ஒரு தீர்வு பிறக்கப் போகிறது

உயிருக்கும், சுதந்திரம் சார்ந்த உரிமைகளுக்கும் உடனடி அச்சுறுத்தல் ஏற்படும் அவசர வழக்குகளை, நீதிமன்றங்களின் வழக்கமான பணி நேரத்தைத் தாண்டி விரைவாக விசாரிப்பதற்கான நடைமுறையை உருவாக்குவது குறித்து பரிசீலிக்க உச்ச நீதிமன்றம் ஒப்புக்கொண்டுள்ளது.
இது தொடர்பாக வழக்கறிஞர் மஹேரவிஷ் ரெய்ன் தாக்கல் செய்த பொதுநல மனுவில், ‘நள்ளிரவில் கைது செய்யப்படுதல், அதிகாலையில் கட்டிடங்கள் இடிக்கப்படுதல், வார இறுதி நாட்களில் நாடு கடத்தப்படுதல் போன்ற சூழல்களை எதிர்கொள்ளும் குடிமக்கள் வழக்கமான நீதிமன்ற நேரம் வரை காத்திருக்காமல், அரசியலமைப்பு ரீதியிலான தீர்வுகளைப் பெறக்கூடிய நிரந்தரமான, சீரான நிறுவன அமைப்பை உருவாக்க வேண்டும்.
தற்போதைய நடைமுறையில் நீதித்துறை சார்ந்த தீர்வுகளைப் பெறுவது பெரும்பாலும் குறிப்பிட்ட நீதிமன்ற நேரங்கள், வேலை நாட்கள், வரையறுக்கப்பட்ட விடுமுறைக்கால அமர்வுகள் ஆகியவற்றில் மட்டுமே சாத்தியமானதாக உள்ளது. இதன் காரணமாக, சுதந்திரம், அடிப்படை உரிமைகள் மீதான அவசர மீறல்களை எதிர்கொள்ளும் குடிமக்கள் இரவு நேரங்களிலும், வார இறுதி நாட்களிலும், பொது விடுமுறை நாட்களிலும், நீதிமன்ற விடுமுறை நாட்களிலும் பயனுள்ள தீர்வுகளைப் பெற முடியாமல் தவிக்கின்றனர்.
அத்தகைய வழக்குகளில் சரியான நேரத்தில் நீதியைப் பெறுவதை உறுதி செய்வதற்கான உத்தரவுகள் மிக முக்கியமானவை. அடிப்படை உரிமைகள் தொடர்பான அவசர வழக்குகளை வழக்கமான நீதிமன்ற நேரத்தைத் தாண்டி விசாரிப்பதற்கு, உயர் நீதிமன்றங்கள் உட்பட அனைத்துஇடங்களிலும் பொருத்தமான நடைமுறைகளை உருவாக்க வேண்டும்” என வேண்டுகோள் வைக்கப்பட்டிருந்தது.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------
”வழக்கறிஞர் மஹேரவிஷ் ரெய்ன் தாக்கல் செய்த பொதுநல மனுவில், ‘நள்ளிரவில் கைது செய்யப்படுதல், அதிகாலையில் கட்டிடங்கள் இடிக்கப்படுதல், வார இறுதி நாட்களில் நாடு கடத்தப்படுதல் போன்ற சூழல்களை எதிர்கொள்ளும் குடிமக்கள் வழக்கமான நீதிமன்ற நேரம் வரை காத்திருக்காமல், அரசியலமைப்பு ரீதியிலான தீர்வுகளைப் பெறக்கூடிய நிரந்தரமான, சீரான நிறுவன அமைப்பை உருவாக்க வேண்டும்”
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------
இந்த மனு, தலைமை நீதிபதி சூர்ய காந்த், நீதிபதிகள் ஜாய்மால்யா பாக்சி, வி.மோகனா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது, மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், இந்த சிக்கலுக்கு தீர்வு காண்பது குறித்து பரிசீலிக்கத் தயாராக இருப்பதாகத் தெரிவித்தனர்.
அவசரமற்ற வழக்குகளைக் கூட விசாரிப்பதற்கு ஏற்ப 24 மணி நேரமும் நீதிமன்றங்கள் செயல்படும் வசதி தவறாகப் பயன்படுத்தப்படக் கூடும் என குறிப்பிட்ட நீதிபதிகள், அவசர வழக்குகறை விசாரிப்பதற்கான சாத்தியமான நிலையான செயல்பாட்டு நடைமுறைகளை வகுப்பது குறித்து உயர் நீதிமன்றங்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.
கருத்துகள் (0)
ஏற்றுகிறது...