/
NFNEWSFELT
சினிமா

‘தினந்தோறும்’ நாகராஜ் மீண்டு வந்த கதை! ‘ஆகாயம்’ பட இசை வெளியீட்டில் தரமான இயக்குநர்களின் வாக்குமூலம்!

‘தினந்தோறும்’ திரைப்படம் வெளியான முதல் நாளில், திரையரங்கில் படம் பார்த்துவிட்டு வெளியே வந்தபோது, ரசிகர்கள் நாகராஜை தூக்கிக் கொண்டாடியதை என் கண்முன்னே பார்த்தேன். அது ‘ஆகாயம்’ படத்துக்கும் நடக்கும்..

Newsfelt Admin12 செப்டம்பர், 202613 நிமிட வாசிப்பு4 பார்வைகள்
பகிர்:

டெல்டா டாக்கீஸ் பட நிறுவனம் சார்பில் ஜெயச்சந்திரன் கார்த்திகா தேவி தயாரிப்பில், இயக்குநர் ‘தினந்தோறும்’ நாகராஜ் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ள புதிய திரைப்படம் ‘ஆகாயம்’. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடைபெற்றது.

விழாவில் இயக்குநர்கள் ஆர்.வி.உதயகுமார், சசி, பாலசேகரன், சேரன், இயக்குநர்கள் பேரரசு, சற்குணம், அஜயன் பாலா எனத் தமிழ் சினிமாவின் தரமான இயக்குநர்கள் சிறப்பு விருந்தினர்களாகத் திரளாகத் திரண்டு வந்து கலந்து கொண்டு நாகராஜின் வெற்றிக்கதையையும் அவரது வீழ்ச்சியையும் அதிலிருந்து மீண்டு வந்து அவர் ‘ஆகாயம்’ படத்தின் மூலம் மீண்டு வந்திருப்பதையும் குறித்து தங்கள் மனதுக்கு நெருக்கமான பல உண்மைகளை உணர்ச்சிகரமாகப் பகிர்ந்தனர்.

இயக்குநர் ‘தினந்தோறும் நாகராஜுன் தயாரிப்பாளர் ‘டெல்டா பிக்சர்ஸ்’ ஜெயசந்திரனும்

விழாவில் படத்தின் தயாரிப்பாளர் ஜெயச்சந்திரன் பேசும்போது: “இது என்னுடைய முதல் மேடை. என்ன பேசுவது என்று தெரியவில்லை. ‘ஆகாயம்’ படத்தின் டிரைலர், பாடல்களை நீங்கள் பார்த்திருப்பீர்கள். ஊடகத்தின் ஒரு செய்தி அல்லது கருத்து ஒரு விஷயத்தையே ஒரே நாளில், சில மணி நேரங்களில் ஏன் சில நொடிகளில் கூட மாற்றக்கூடியது. அந்த மீடியாவை நம்பித்தான் ஊடக நண்பர்களாகிய உங்களிடம் என்னுடைய முதல் படைப்பைக் கொண்டு வந்திருக்கிறேன். இந்தப் படத்திற்கு உங்கள் வாழ்த்தும் ஆதரவும் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறேன். ஏனென்றால் தினந்தோறும் நாகராஜ் தரமான பொழுதுபோக்குப் படத்தைக் கொடுத்திருக்கிறார். சுவாரசியமான முயற்சிகளை எப்போதுமே கொண்டாடும் நீங்கள், இதையும் மக்களிடம் எடுத்துச் செல்லவேண்டும்” என்றார்.

நாகாரஜ் கதை சொல்லும் விதம்!

எழுத்தாளர் அஜயன் பாலா பேசும்போது, நாகராஜின் நெருக்கமான நண்பர் என்பதை வெளிப்படுத்திப் பேசினார்: “தினந்தோறும் நாகராஜை நான் சுமார் 25 ஆண்டுகளாக நண்பராக அறிந்திருக்கிறேன். பத்திரிகையில் பணியாற்றிய காலத்தில் அவரை முதன்முதலில் சந்தித்தேன். அப்போது அவர் கதை சொல்லும் விதம் என்னை மிகவும் வியக்க வைத்தது. ஒவ்வொரு காட்சியையும் கண்முன்னே நடப்பது போல் மிக நுணுக்கமாக விவரிப்பார். அந்தக் காலகட்டத்தில் நாங்கள் அனைவரும் அவரைச் சுற்றி இருந்து, அவர் கதை சொல்வதைக் கேட்பதற்காக ஆர்வத்துடன் காத்திருப்போம். அந்த அளவுக்கு அவரது கதை சொல்லும் திறமை எங்களை வசீகரித்தது” என்றார்.

மேலும், “‘தினந்தோறும்’ திரைப்படம் வெளியான முதல் நாளில், திரையரங்கில் படம் பார்த்துவிட்டு வெளியே வந்தபோது, ரசிகர்கள் நாகராஜை தூக்கிக் கொண்டாடியதை என் கண்முன்னே பார்த்தேன். அன்றைக்கு நாகராஜ் மிகப்பெரிய இடத்தைப் பிடிப்பார் என்று நாங்கள் அனைவரும் எதிர்பார்த்தோம். ஆனால், அதன்பிறகு நடந்தது நாங்கள் எதிர்பார்க்காத ஒன்று. வாழ்க்கையில் ஒருவர் எவ்வளவு கீழே செல்ல முடியுமோ, அந்த அளவுக்கு நாகராஜ் சென்றார். அவருடைய திறமை இருந்தும், தனது திறமையைப் பற்றி அவர் பெரிதாக அலட்டிக் கொண்டதில்லை” என்று கூறினார்.



நாகராஜ் மீண்டது இப்படித்தான்!

தொடர்ந்து பேசிய அவர், “நாங்களும் சசியும் கூட ஒரு கட்டத்தில் நாகராஜ் முடிந்துவிட்டார் என்றுதான் நினைத்தோம். ஆனால், எவ்வளவு கீழே சென்றாலும் ஒருவரால் மீண்டும் மேலே வர முடியும் என்பதற்கு நாகராஜ் மிகப்பெரிய உதாரணமாக இருக்கிறார். ஒருகாலத்தில் நாங்கள் ஹீரோவாகப் பார்த்த நாகராஜ், இன்று மீண்டும் தனது படைப்புடன் வந்திருக்கிறார். இந்த விழா மற்றவர்களுக்கு ஒரு சாதாரண விழாவாக இருக்கலாம்; ஆனால் நாகராஜைப் பொறுத்தவரை இது ஒரு புதிய பிறப்பு போன்றது” என்றார். படத்தில் உழைத்த அனைவருக்கும் வாழ்த்துக்கள். படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

இயக்குநர் பாலசேகரன் பேசும்போது:

“நாகராஜ் அண்ணாவை சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பே சந்தித்தேன். பார்த்தவுடனேயே அவரது பேச்சு, பழகும் விதம், கதை சொல்லும் திறன், காட்சிகளை விவரிக்கும் விதம் என அனைத்தும் என்னை மிகவும் கவர்ந்தது. சினிமாவில் எனக்கு குரு என்று யாரையாவது சொல்ல வேண்டும் என்றால் அது நாகராஜ் அண்ணா மட்டும்தான். அவரிடமிருந்து வசனம், மாடுலேஷன், கதை சொல்லும் விதம் என நிறைய விஷயங்களைக் கற்றுக்கொண்டிருக்கிறேன். குறிப்பாக, அவரது படங்களில் பெண் கதாபாத்திரங்களையும், பெண்களுக்கான வசனங்களையும் மிகவும் நாகரிகமாகவும் கச்சிதமாகவும் அமைத்திருப்பார்” என்றார்.


சூப்பர் ஸ்டார் ரவிதேஜாவை எப்படி உருவானார்!

பாலசேகரன் மேலும் பேசும்போது: “‘தினந்தோறும்’ படத்தில் நாகராஜ் சார் நடித்த கதாபாத்திரம் தெலுங்கில் ‘மனிஷி’ என்ற பெயரில் வெளியானது. அந்தப் படத்தில் அவருடன் நடித்தவர்தான் இன்று மிகப்பெரிய ஹீரோவாக இருக்கும் ரவிதேஜா. அந்த அளவுக்கு மிகப்பெரிய பெயர் பெற வேண்டிய திறமை கொண்டவர் நாகராஜ் சார். இடையில் அவரது வாழ்க்கையில் சில விஷயங்கள் நடந்தாலும், அவர் சினிமாவை மட்டும் ஒருபோதும் கைவிடவில்லை. சினிமா ஒருவரைக் கடைசி வரை கைவிடாது என்பதற்கு நாகராஜ் சாரே மிகச் சிறந்த உதாரணம். இன்று ‘ஆகாயம்’ படத்தை உருவாக்கி அனைவரையும் அழைத்து அமர வைத்திருப்பதைப் பார்க்கும்போது மிகவும் பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது” என்றார்.

தொடர்ந்து, “நாகராஜ் சாரின் திறமையை மட்டுமே பார்த்து இந்தப் படத்தைத் தயாரித்த தயாரிப்பாளர்கள் ஜெயச்சந்திரன் சாருக்கும் கார்த்திகா தேவி அவர்களுக்கும் நன்றி சொல்ல வேண்டும். மற்ற துறைகளில் அனுபவமுள்ளவர்களைத் தேடிப் பார்க்கிறோம்; ஆனால் சினிமாவில் மட்டும் அனுபவம் வாய்ந்தவர்களைத் தவிர்ப்பது ஏன் என்று எனக்குப் புரியவில்லை. அதைத் தாண்டி நாகராஜின் திறமையை நம்பி அவரைத் தேர்ந்தெடுத்தது பாராட்டுக்குரியது. அவரது படங்களில் எப்போதும் சமூக அக்கறையும், சமூக விஷயங்களைப் பேசும் வசனங்களும் இருக்கும். சும்மா ஒரு படத்தை உருவாக்காமல், ஏதாவது ஒரு விஷயத்தைச் சொல்ல வேண்டும் என்பார். அவரது வாழ்க்கையில் அவருக்குத் துணையாக இருந்த குடும்பத்தின் ஆதரவும் மிகப்பெரிய பலமாக இருந்திருக்கிறது. ‘ஆகாயம்’ மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும்; நாகராஜ் சார் மீண்டும் மிகப்பெரிய உயரத்தை அடைய வேண்டும்” என்று வாழ்த்தினார்.

ஆகாயம் படத்தின் நாயகன் ஶ்ரீராம் கார்த்திக் பேசும்போது

“நாகராஜ் சார் போன்ற ஒரு பெரிய இயக்குநருடன் பணியாற்றியது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. அவர் இந்தக் கதாபாத்திரத்தை எவ்வளவு நேசித்து உருவாக்கியிருக்கிறார் என்பதை அவர் கதை சொல்லும்போதே உணர்ந்தேன். படப்பிடிப்பின் கடைசி நாளில் கூட, நான் அவர் நினைத்தபடியே அந்தக் கதாபாத்திரமாக நடித்திருக்கிறேன் என்று கூறி என்னைப் பாராட்டியது எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியைத் தந்தது. அவரது இயக்கமும், குறிப்பாக வசனங்களும் இந்தப் படத்தின் மிகப்பெரிய பலம். சிறிய வசனங்கள்கூட ஒரு காட்சியை எப்படி உயர்த்துகின்றன என்பதை இந்தப் படத்தில் நேரடியாகப் பார்த்தேன்” என்றார்.

இசையமைப்பாளர் ரகுநந்தன் பேசியதாவது:

“இந்தப் படத்தில் என்னை இசையமைக்க அழைத்த தயாரிப்பாளர் ஜெயச்சந்திரன் மற்றும் இயக்குநர் நாகராஜ் சாருக்கு முதலில் நன்றி சொல்ல வேண்டும். நாகராஜ் சாரை முதன்முதலில் சந்தித்தபோது, அவருடன் பணியாற்றுவது கொஞ்சம் பயமாக இருந்தது. ஆனால் அவர் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக ஒவ்வொரு கதாபாத்திரமாக நடித்துக் காட்டி கதை சொன்ன விதம் என்னை மிகவும் ஆச்சரியப்படுத்தியது. ஒவ்வொரு கதாபாத்திரத்தோடும் அவர் வாழ்ந்தது போல உணர்வார். அதனால் அவர் கதை சொல்லும்போது முழு கவனத்துடன் கேட்டுக்கொண்டிருப்பேன்” என்றார்.


மேலும், “பாடல்கள் உருவாக்கத்திலும் நாகராஜ் சார் முழுமையாக ஈடுபட்டார். ரெக்கார்டிங்கின்போதும் இசைக்கலைஞர்களுடன் அமர்ந்து, ஒவ்வொரு விஷயத்தையும் ரசித்து, சரியானதைத் தேர்வு செய்தார். பின்னணி இசையிலும் படத்தின் கதாபாத்திரங்களையும், நடுத்தரக் குடும்பங்களின் இயல்பான வாழ்க்கையையும் மனதில் வைத்து பணியாற்றினோம். ஹீரோ, ஹீரோயின் உள்ளிட்ட அனைவரும் தங்கள் கதாபாத்திரங்களை வாழ்ந்திருக்கிறார்கள். அதனால் பின்னணி இசையிலும் வித்தியாசமான அணுகுமுறையைக் கொண்டு வர வேண்டும் என்று நினைத்தேன்” என்றார்.

“நாகராஜ் சாருடன் பணியாற்றியது எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி. ‘தினந்தோறும்’ படத்திலிருந்தே அவரது படைப்புகளுக்கு நான் ரசிகன். இந்தப் படம் நிச்சயமாகத் தேசிய விருது பெற வேண்டும் என்று நான் மனதார விரும்புகிறேன். ஒவ்வொரு படத்தையும் ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கும் ஊடக நண்பர்கள், இந்தப் படத்தையும் மக்களிடம் கொண்டு சேர்ப்பார்கள் என்று நம்புகிறேன். இந்தப் படத்தில் பணியாற்றிய அனைவருக்கும், மேடையில் இருக்கும் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்” என்றார்.


இயக்குநர் சசி பேசும்போது:

“என்னுடைய நண்பர் நாகராஜுக்காக, ‘ஆகாயம்’ படத்தை உருவாக்கிய தயாரிப்பாளருக்கு ஒரு நண்பனாக முதலில் நன்றி சொல்ல வேண்டும். இசையமைப்பாளர் ரகுநந்தன் சாரின் பாடல்களை நான் நிறையக் கேட்டிருக்கிறேன். இந்தப் படத்தின் பாடல்களும் கதைக்கு ஏற்ற வகையில் மிகவும் எளிமையாகவும், மக்கள் எளிதில் ரசிக்கும் வகையிலும் இருக்கின்றன. இந்தப் பாடல்கள் நிச்சயம் மக்களைச் சென்றடையும். படத்தில் நடித்துள்ள நடிகர்கள், பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் என்னுடைய நன்றிகள்” என்றார்.

“நாகராஜை நான் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பே சந்தித்தேன். அப்போது அவர் ஒரு கதையை மாலை 6 மணிக்குத் தொடங்கி இரவு 8 மணி வரை சொன்னார். அவர் கதை சொன்ன விதம் என்னை அப்படியே பிரமிக்க வைத்தது. ‘என்னால் இப்படி ஒருபோதும் கதை சொல்ல முடியாது; இப்படிக் கதை சொல்லத் தெரியவில்லை என்றால் நல்ல இயக்குநராக முடியாது’ என்று நினைத்து, அன்றே அவரைப் பற்றி நண்பர்களிடம் பெருமையாகப் பேசினேன். நாகராஜ் எனக்கு நண்பர் என்றாலும், அவரை நான் மிகப்பெரிய கிரியேட்டிவ் மனிதராகப் பார்க்கிறேன். அவருடைய கதைகளில் இருக்கும் சென்சிபிலிட்டியும், குறிப்பாகப் பெண் கதாபாத்திரங்களில் இருக்கும் கண்ணியமும் எனக்கு மிகவும் பிடிக்கும்” என்றார்.

“சில இயக்குநர்கள் தப்பான படங்களை எடுக்கவே மாட்டார்கள்; அப்படித் தவறான படமே எடுக்க முடியாத இயக்குநராக நாகராஜை நான் பார்க்கிறேன். சில படங்கள் திரையரங்கில் ஓடி முடிந்துவிடும்; ஆனால் சில படங்கள் முடிந்த பிறகும் நம் மனதில் தொடர்ந்து ஓடிக்கொண்டே இருக்கும். அப்படிப்பட்ட படங்களை உருவாக்கும் இயக்குநர்தான் நாகராஜ். ‘ஆகாயம்’ படத்தை நான் மிகவும் எதிர்பார்க்கிறேன். நீங்களும் எதிர்பாருங்கள். நாகராஜ் நம்மை ஏமாற்ற மாட்டார் என்று நம்புகிறேன். இந்தப் படம் மிகப்பெரிய வெற்றி பெற எனது வாழ்த்துகள்” என்றார்.

இயக்குநர் பேரரசு பேசியதாவது..

“‘ஆகாயம்’ படத்தின் மூலம் மீண்டும் சினிமாவுக்குள் வந்திருக்கும் நாகராஜை பார்க்கும்போது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. ஒரு காலகட்டத்தில் அவரைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். பின்னர் அவரை நேரில் சந்தித்தபோது, சினிமா மீதான அவரது ஆர்வமும், கதை சொல்லும் திறமையும் என்னை மிகவும் கவர்ந்தது. நாகராஜ் மிகப்பெரிய திறமைசாலி. அவரது ‘தினந்தோறும்’ படத்தில் அவர் நடித்த விதமும், கதாபாத்திரத்தைக் கையாண்ட விதமும் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இடையில் அவரது வாழ்க்கையில் தடுமாற்றங்கள் ஏற்பட்டிருந்தாலும், அதிலிருந்து அவர் மீண்டு வந்திருப்பது மிகவும் பாராட்டுக்குரியது” என்றார்.

தொடர்ந்து பேரரசு பேசும்போது: , “தமிழ் சினிமாவில் இன்று வெற்றி பெற்றிருக்கும் பல இயக்குநர்களின் வளர்ச்சிக்குப் பின்னால் நாகராஜின் பங்களிப்பும் இருக்கிறது. பலருக்குத் தனது திறமையின் மூலம் உதவியிருக்கிறார். ‘தினந்தோறும்’ படத்தில் அவரது நடிப்பைப் பார்த்தபோதே, இயல்பான வசனம், எதார்த்தமான நடிப்பு, உடல்மொழி என அனைத்திலும் அவர் ரசிகர்களைக் கவர்ந்தார். அப்படிப்பட்ட ஒரு கலைஞர் மீண்டும் ‘ஆகாயம்’ மூலம் வந்திருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்தப் படத்தின் மூலம் நாகராஜ் மீண்டும் மிகப்பெரிய வெற்றியைப் பெற வேண்டும். தொடர்ந்து படங்கள் இயக்க வேண்டும். இனிமேல் அவருக்குத் தோல்வி என்பதே இல்லாமல் வெற்றி, வெற்றி, வெற்றி மட்டுமே கிடைக்க வேண்டும்” என்று வாழ்த்தினார்.

இயக்குநர் ‘தினந்தோறும்’ நாகராஜ் ‘ஆகாயம்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ஏற்புரையாக என்ன பேசியிருப்பார்? அதை நியூஸ் ஃபெல்ட் தளத்தின் சினிமா பகுதியில் தனிச் செய்தியாக வாசியுங்கள். இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பகிர்:

கருத்துகள் (0)

கருத்திட உள்நுழையுங்கள்.

ஏற்றுகிறது…

தொடர்புடைய கட்டுரைகள்