அஞ்சலி: எஸ்.ஜானகி | ‘இது மௌனமான நேரம்..’
Author
சோழ யாழினி
Date Published

தென்னிந்தியத் திரையிசையின் ஆகச்சிறந்த அடையாளங்களில் ஒன்றாக விளங்கி வந்த பாடும் பால் நிலா, ‘கானக்குயில்’ எஸ்.ஜானகியில் குரல் ஓர் தாய்மையின் வடிவம். அது தலைமுறைகளைக் கடந்த ஒரு தீராத தாலாட்டின் உணர்வு. மழலையின் மொழியிலிருந்து வயோதிகத்தின் கனிவு வரை தன் குரலால் அத்தனை உணர்ச்சிகளையும் அனாயாசமாகப் பாடி முடித்தவர் அவர், அவரின் குரல், வரிகளுக்கு வாழ்வளித்த ஒன்று, இசையமைப்பாளரின் கற்பனைக்கு உயிர்கொடுத்து காற்றைக் கௌரவம் செய்த வசந்தகாலக் கோலம்.
ஆந்திர மாநிலத்தைப் பூர்வீகமாகக் கொண்ட எஸ்.ஜானகி, 1957-ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர். - சாவித்திரி நடித்த ‘மகாதேவி’ திரைப்படத்தில் இடம்பெற்ற "சிங்கார வேலனே தேவா..." என்ற பாடலின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். நாதஸ்வர இசைக்கு இணையாக, தன் குரலால் அவர் நிகழ்த்திய ஆலாபனைகள் ஒட்டுமொத்தத் தென்னிந்தியத் திரையுலகையும் திரும்பிப் பார்க்க வைத்தன. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என அனைத்துத் தென்னக மொழிகளிலும் தன் அசாத்தியத் திறமையால் குறுகிய காலத்திலேயே வெற்றிக்கொடி நாட்டினார்.

மறக்க முடியாத பெண் இணைக் குரல்கள்
பி.சுசீலாவுடன் இணைவும் ஜாலமும்
எம்.எஸ்.விஸ்வநாதன் முதல் இளையராஜா வரை பல உச்சம் தொட்ட இசையமைப்பாளர்களின் இசையமைப்பில், சக புகழ்பெற்ற பின்னணிப் பாடகியான பி.சுசீலாவுடன் இணைந்து ஜானகி பாடிய பாடல்கள் அலாதியானவை. சுசீலாவின் குரலில் இருக்கும் செவ்வியல் தன்மையும், ஜானகியின் குரலில் இருக்கும் கொஞ்சலும் சேர்ந்துகொள்ளும்போது அங்கே ஒரு தனித்துவமான ஜாலம் பிறந்தது.
"மலர் போன்ற பருவம்...", "கொஞ்சும் புறாவே..." போன்ற பாடல்களில் இரு பெரும் ஆளுமைகளும் போட்டிப் போடாமல், ஒருவருக்கொருவர் தங்கள் குரல்களின் தனித்து மேன்மையை உணர்ந்து பாடி, பாடலின் இனிமையைக் கூட்டிய ‘குரல் இணைவு’ திரையிசையில் பெண் குரல்களின் வழி நிகழ்ந்த ‘வாய்ஸ் ஹார்மொனி’களின் பொற்காலத்துக்குப் பல பாடல்களைப் பெரும் சொத்தாகச் சேர்த்துவிட்டுச் சென்றிருக்கிறது.
எஸ்.பி.பி. - ஜேசுதாஸ்: டூயட் இனிமையின் உச்சம்
அதேபோல் ஆண் பாடகர்களுடன் ஜானகி இணைந்து பாடிய டூயட் பாடல்கள் காதலின் ஆகச்சிறந்த உச்சங்கள். காதலை கௌரவம் செய்தவை.
எஸ்.பி.பாலசுப்ரமணியம் - ஜானகி இவர்களின் கூட்டணி ஒரு தீராத கொண்டாட்டம். எஸ்பிபியின் துள்ளலும், ஜானகியின் குறும்புத்தனமும் இணையும்போது பாடல்களில் ஓர் அலாதி ‘லைவ்லிநெஸ்’ பாடலில் துள்ளத் துடிக்க இடம்பெற்றுவிடும். கே.ஜே.யேசுதாஸ் - ஜானகி இவர்களின் குரல் இணைவு தெய்வீகத் தன்மையை நோக்கு வேறொரு டிவோசனல் நிலைக்கு உயர்ந்துவிடும். ஜேசுதாஸின் கணீரென்ற குரலுக்கு, ஜானகியின் மென்மையான குழைவு தரும் ‘இணைவும் டூயட் இனிமையும்’ கேட்போரை எல்லா கவலைகளிலிருந்து கரைக்கும் வல்லமை கொண்டது.
இளையராஜாவின் இசையில்
இதற்கெல்லாம் காரணமாகச் சாகாவரம் பெற்ற பாடல்களை கம்போஸ் செய்த இளையராஜா அளவுக்கு ஜானகியின் குரலைத் திறம்படப் பயன்படுத்திய ஓர் இசையமைப்பாளர் வேறு யாருமில்லை என்று சொல்லிவிடலாம். அதனால், எஸ்.ஜானகியின் திரையுலகப் பயணத்தில் மாபெரும் திருப்புமுனை ‘இசைஞானி’ இளையராஜாவின் வருகைதான் என்கிற பார்வையை யார் மறுக்க முடியும்?. ஜானகியின் குரல் சாத்தியங்களை மிகச் சரியாகப் பயன்படுத்தியவர் இளையராஜா தான். உதாரணமாக ராஜாவின் அறிமுகப்படமான "அன்னக்கிளி உன்னைத் தேடுதே..." பாடலில் தொடங்கி ஜானகியின் குரலில் ஒளிந்திருக்கும் கிராமத்து மண்ணின் வாசனையை ஓர் இசை அகழாய்வு அறிஞன் போல் மாறி ராஜா ஜானகியின் சிறந்த குரல் வளத்தை அறுவடை செய்த மகா கலைஞன்.
அதேபோல் காதலின் ஏக்கத்தையும் காதலின் வலியையும் வெளிப்படுத்த ராஜா நம்பியதும் நாடியதும் ஜானகியின் குரலைத்தான். அதற்கு இரண்டு பாடல்களை மட்டும் எடுத்துக்காட்டாகக் காட்டினால் போதும். "காற்றில் எந்தன் கீதம்..." (ஜானி) பாடலில் சோகத்தின் உச்சத்தையும், "சங்கத்தில் பாடாத கவிதை..." (ஆட்டோ ராஜா) பாடலில் காதலின் தவிப்பையும் ஜானகியின் குரல்வழி ராஜா தந்தார். அதேபோல்
"மௌனமான நேரம்...", "புங்கற்றுத் திரும்புமா..." போன்ற பாடல்கள் ஜானகி என்ற பாடகியின் குரலில் தேவைப்படும்போதெல்லாம் இழையோடும் கதாபாத்திரத்தின் கனத்த இதயத்தின் வலியை நமக்குக் கடத்திவிடுவார்.
வசந்தகால கோலங்கள்’... இளையராஜா ஜானகி இணை தந்த மிக நுட்பமான கலைப் படைப்புகளில் ஒன்று இப்பாடல். அலைகளினூடே மின்னும் ஒளித் துணுக்குகளைப் போன்ற கிட்டார் இசையுடன் இப்பாடல் தொடங்கும். வார்த்தைகளினூடே குறுக்கிடும் வலி நிறைந்த குரலில் கண்ணீரின் இசை வடிவமாகப் பாடியிருப்பார் ஜானகி. ‘கலைந்திடும் கனவுகள் கண்ணீர் சிந்தும் நினைவுகள்’ எனும் ஒற்றை வரி, எங்கோ ஒரு கடலோர கிராமத்தில், கைவிட்டுப் போன வாழ்க்கையின் நினைவுகளுடன் தவிக்கும் பெண்ணை உருவகப்படுத்தும்.
முதல் நிரவல் இசையில் ஒலிக்கும் சாக்ஸபோன், துயரத்தை வசதியாக வெளிப்படுத்தும் அளவுக்குப் பரந்த தனிமையைக் கொண்ட வெளியை மனதுக்குள் விரிக்கும். இரண்டாவது நிரவல் இசையில் பகிர்ந்துகொள்ள முடியாத துயர நினைவுகளின் முணுமுணுப்பைப் போன்ற மர்மத்துடன் புல்லாங்குழலை ஒலிக்க விட்டிருப்பார் இளையராஜா. மனதின் ரகசிய அடுக்குகளைத் துழாவும் இசைக்கோவை அது. ‘நன்றி நன்றி தேவா… உன்னை மறக்க முடியுமா?’ எனும் வரியில் ஜானகி காட்டும் பாவம்... அதை எழுத வார்த்தைகள் இல்லை!
பாடலின் சூழலுக்கும் பாடலில் இடம்பெறும் கதாபாத்திரத்தின் மனநிலைக்கும் ஏற்பத் தன் குரலை மாற்றிக் கொள்ளும் ‘குரல் நடிப்பு’ தான் ஜானகியின் ஆகப்பெரும் பலம். பல்லாயிரக்கணக்கான பாடல்கள், பல தேசிய விருதுகள் என சாதனைகளின் சிகரம் தொட்டாலும், எளிய மனிதராகவே வாழ்ந்து வந்தவர். மிகுந்த தெய்வபக்தி கொண்டிருந்தார். சென்னையின் ஆழ்வார்பேட்டையில் உள்ள வீனஸ் காலனியில் மகனுடன் வசித்து வந்தவர், கடந்த 2016ஆம் ஆண்டே திரைக்கும் மேடைக் கச்சேரிக்கும் பாடுவதை நிறுத்திக்கொண்டு ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
பத்மபூஷன் மறுப்பு
எஸ்.ஜானகி அவர்களின் அசாத்தியப் பாடும் திறமைக்காக நான்கு மத்திய அரசு தேசிய விருதுகளும், தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா மற்றும் கர்நாடகா ஆகிய மாநில அரசுகளின் உயரிய விருதுகளும் அவரைத் தேடி வந்தன. ஆனால், 2013-ஆம் ஆண்டு மத்திய அரசு அவருக்கு அறிவித்த ‘பத்மபூஷன்’ விருதை அவர் அன்போடு மறுத்துவிட்டார். "தென்னிந்திய கலைஞர்களுக்குத் தகுதியான அங்கீகாரம் உரிய நேரத்தில் கிடைப்பதில்லை; திரையுலகில் அரை நூற்றாண்டுக் காலத்திற்கும் மேலாகப் பாடி, ஒட்டுமொத்தத் தென்னக மக்களும் கொண்டாடிய பிறகு, என் வாழ்நாளின் இறுதிக்கட்டத்தில் இந்த விருது வழங்கப்படுவது மிகவும் தாமதமானது" என்று கூறி, அவ்விருதைத் திருப்பி அனுப்பினார். விருதுகளை விடவும் மக்களின் இதயங்களில் தனக்குக் கிடைத்த ‘கானக்குயில்’ என்ற பட்டமே தனக்கு அரியணை என்று நிரூபித்த கம்பீரம் அது.
மொழிகளைக் கடந்து, இதயங்களை வென்ற அந்த ‘கானக்குயில்’ பாடுவதை நிறுத்தியிருக்கலாம்; ஆனால், காற்றில் கலந்திருக்கும் அவரது குரல் தமிழும் பூமிப்பந்தும் இருக்கும்வரை ஒலிப்பதை நிறுத்தப்போவதில்லை. குரலால் அவர் வாழட்டும்.
கட்டுரையாளர், பள்ளி ஆசிரியை. தஞ்சையில் வசிக்கிறார்.
அடுத்த கல்வியாண்டு முதல் அமல்படுத்தப்படும் இத்திட்டத்தின் மூலம் பத்து லட்சம் மாணவர்கள் பயனடைவார்கள்.