/
NFNEWSFELT
சினிமா

அன்பில் அவன் விமர்சனம் | காதலிக்காக ரண களமாடும் ஒருவன்!

அசோக் செல்வனுக்கும் இது பொருத்தமான கதாபாத்திரம். அன்புக்கு அன்பையும், அநீதிக்கு ஆக்ரோஷத்தையும் சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார்.

Newsfelt Admin2 அக்டோபர், 20265 நிமிட வாசிப்பு
பகிர்:

தன் காதலிக்காக ஒரு காதலன் எந்த அளவுக்கு அன்பைப் பொழிய முடியும் என்பதைச் சொல்லும் கதைதான் இந்த ‘அன்பில் அவன்’.

சூர்யாவும் (அசோக் செல்வன்) இயலும் (பிரீத்தி முகுந்தன்) காதலித்துத் திருமணம் செய்துகொண்ட ஜோடி. காதலின் பொருட்டுத் தன் வசதியான குடும்பத்தை உதறிவிட்டு, சூர்யாவைக் கைப்பிடித்து வாழ்க்கையின் போதாமைகளுக்கிடையே வசிக்கிறார் இயல். மலைப்பிரதேசம் ஒன்றில் 'ஹோம் ஸ்டே' பிசினஸ் தொடங்க வேண்டும் என்பது இயலின் கனவு. அதை நிறைவேற்றச் சூர்யா எடுக்கும் முயற்சிகளில் தொடங்குகிறது படம். காதல் மனைவி விரும்பிவிட்டாள் என்பதற்காக மூணாறு அருகே இடம் பார்த்து, போராடி அந்த வீட்டை வாங்கித் தயார் செய்கிறார்கள். ஆனால், எதிர்பாராதவிதமாக ஆதிக்கச் சக்திகளின் சதி வலைக்குள் அந்த வீடு சிக்குகிறது. எந்தப் பின்னணியும் இல்லாத இந்தத் தம்பதியால் அந்த அச்சுறுத்தலை எதிர்த்து வெல்ல முடிந்ததா என்பதை அதிரடி ஆக்‌ஷன் திரைக்கதையாகப் பேசியிருக்கிறது படம்.

முன்பாதியில் காதல் கெமிஸ்ட்ரி இயல்பாகப் பொருந்தியிருக்கிறது. அதேவேளையில், கதையில் திணிக்கப்பட்டுள்ள சண்டை சச்சரவுகளில் பிரீத்தியின் ஆக்ரோஷம் அதிகமாகவும், அசோக்கின் ஆத்திரம் அடக்கி வாசிப்பதாகவும் அமைக்கப்பட்டிருக்கிறது.

மூணாறில் ஒரு குறிப்பிட்ட இடத்திலுள்ள பிரமாண்ட பங்களாவை அடைய விரும்புகிறார் ஓர் எம்.எல்.ஏ. அதே பங்களாவை விடுதியாக மாற்ற விரும்புகிறது இந்தக் காதல் தம்பதி. இந்த இரு தரப்புக்குமான மோதலை ஒரு ‘மினி போர்’ அளவுக்குக் காட்சிப்படுத்த உச்சபட்ச தைரியம் வேண்டும்; அது இயக்குநர் ஆர். கார்த்திகேயனிடம் நிரம்பவே இருந்திருக்கிறது. படம் பார்க்க விரும்பும் ரசிகர்களுக்கும் அப்படியொரு தைரியம் தேவைப்படலாம்!

எம்.எல்.ஏ-வாக கதிர்பாலு, காமவெறி பிடித்த இன்ஸ்பெக்டராக மஹா டெல்லி கணேஷ், வழக்கறிஞராக சாபுமோன் அப்துசமத் ஆகிய மூவரும் கூட்டணியமைத்துப் போட்டி போட்டு வில்லத்தனம் செய்திருக்கிறார்கள். பிரீத்திக்கு இவர்கள் கொடுக்கும் மெகா சிக்கல்கள் பார்வையாளர்களைப் பதற வைக்கின்றன. அதற்கெல்லாம் இறுதியில் பிரீத்தி கொடுக்கும் பதிலடி ‘செம’!

ஆனால், கிட்டத்தட்ட அரை மணி நேரம் நீடிக்கும் அந்த கிளைமாக்ஸ் சண்டைக் காட்சி, ‘டாக்ஸிக்’, ‘தி பாரடைஸ்’ போன்ற படங்கள் தந்த எரிச்சலுணர்வையே மீண்டும் நினைவூட்டுகிறது. அத்தனை ரத்தச் சகதிச் சம்பவங்களுக்குப் பிறகும் நாயகனும் நாயகியும் உயிர்த்தெழுந்து, நினைத்ததைச் செய்து முடிக்கிறார்கள் என்பதை ஏற்றுக்கொள்ள, பார்வையாளர்கள் தம்மை முழு முட்டாள் மனநிலைக்குக் கடத்திக் கொள்ள வேண்டியிருக்கிறது.

மண்வாசனைக்காக மட்டுமே வந்துபோகும் ரேவதி, ‘தன் மண்ணை விற்க மாட்டேன்’ எனப் பிடிவாதம் பிடிக்கும் பாத்திரத்தில் ஜஸ்ட் எட்டிப் பார்த்துவிட்டுப் போகிறார்.

‘அழகிய காதல் கொஞ்சம், அதிரடிச் சம்பவங்களுக்கு இல்லை பஞ்சம்’ என்றாகிவிட்ட கதைக்களத்திற்குப் பொருத்தமான ஆர்ப்பாட்டமான பின்னணி இசையைத் தந்திருக்கிறார் கோவிந்த் வசந்தா. அதேநேரம், ‘கல்லா நிக்கிறீயே’ பாடலைச் செவிகளுக்கு இதமாகத் தந்து மனதிலும் ஏற்றுகிறார். திரும்பிய பக்கமெல்லாம் பசுமை நிரம்பியிருக்கும் மலைப்பிரதேசத்தைக் கழுகுப் பார்வையில், இருளிலும் பகலிலும் அழகாக வளைத்துச் சுருட்டியிருக்கிறது கௌதம் ராஜேந்திரனின் ஒளிப்பதிவு. ஒரு வீட்டிற்குள் நடக்கும் போராட்டத்தைப் பதைபதைப்போடு படமாக்கியிருப்பதிலும் இவரது உழைப்பு அசர வைக்கிறது.

அசோக் செல்வனுக்கும் இது பொருத்தமான கதாபாத்திரம். அன்புக்கு அன்பையும், அநீதிக்கு ஆக்ரோஷத்தையும் சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார். பிரீத்தியைக் காதலிக்கும் காட்சிகளில் படு ஸ்டைலிஷாக வரும் அசோக், 70 அடி உயரத்திலிருந்து குதிக்கும் காட்சியில் 'டூப்' இல்லாமல் துணிச்சலாகக் குதித்துப் பாராட்டு பெறுகிறார்.

அதேபோல், தன் அழகுக்கு அன்றாடம் வரும் சவால்களை இளம் பெண்கள் எதிர்கொள்ளும் யதார்த்தத்தைப் பிரீத்தியும் தன் நடிப்பில் நேர்த்தியாகக் கொண்டுவந்திருக்கிறார். படத்தின் பிற்பாதியில் ஆற்றாமையால் இருவருக்குள்ளும் ஏற்படும் வாக்குவாதம் மிக இயல்பாகவும் உண்மைக்கு நெருக்கமாகவும் படமாக்கப்பட்டுள்ளது.

விக்னேஷ் ராஜாவின் கதைக்கு, அவரோடு சேர்ந்து ஆர். கார்த்திகேயன் மற்றும் அசோக் செல்வன் ஆகிய மூவரும் எழுதியிருக்கும் திரைக்கதை கூட்டணி சிறப்பாகவே பணியாற்றியிருக்கிறது. ஆனால், இறுதிக்கட்டத்தில் இத்தனை நீளமான ஆக்‌ஷன் காட்சிகள் தேவையா என்பதை இயக்குநர் கவனித்திருக்க வேண்டும். ஏனெனில், அத்தனை பெரிய தீரமிக்க நாயகனாக அசோக் செல்வனின் பாத்திரம் முன் பாதியில் படைக்கப்படவில்லை. எதிரிகளை இப்படித் தனி ஆளாக எதிர்த்து வீழ்த்திவிட முடியும் என்றால், அவர் யாருக்கும் எதற்கும் பயந்து நகர வேண்டிய அவசியமே எழுந்திருக்காதே!என்றாலும் அழகானதொரு காதலுக்கு நடுவே சொல்லப்பட்ட இந்த ஆக்‌ஷனை ரசிக்கலாம்.

மதிப்பெண் 3.1/5

பகிர்:

கருத்துகள் (0)

கருத்திட உள்நுழையுங்கள்.

ஏற்றுகிறது…

தொடர்புடைய கட்டுரைகள்