சமத்துவம் சமூகநீதி ஜனநாயகம் தழைத்தோங்கும் தேசத்தை உருவாக்குவோம் | முதல்வர் விஜய் ஆகஸ்ட் 15 தின உரையின் சாரம்!
முதல்வர் சி.ஜோசப் விஜயின் வேகமும் அவர் பெற்றுவரும் தமிழ்நாட்டுக்கான தொலைநோக்குப் பார்வையும் அவரின் இன்றைய உரையில் வெளிப்பட்டன..

அரசியல் பிரிவு செய்தியாளர்
சென்னை: ‘சமத்துவமும் சமூகநீதியும் ஜனநாயகமும் தழைத்தோங்கும் இந்தியாவை உருவாக்கிட இந்நன்னாளில் உறுதியேற்போம்’ என்று நாட்டின் 80-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழக முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார்.
சென்னை புனித ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் இன்று முதல்முறையாக தேசியக் கொடியை ஏற்றி வைத்து சுதந்திர தின உரையாற்றிய முதல்வர் விஜய், நாட்டின் விடுதலைக்காக உயிரையும் உடமைகளையும் தியாகம் செய்த பிரபலமான மற்றும் பெயர் தெரியாத சுதந்திரப் போராட்டத் தியாகிகள் அனைவருக்கும் வீர வணக்கம் செலுத்தினார்.
சாதி, மதம், மொழி, இனம் உள்ளிட்ட வேறுபாடுகளை உடைத்தெறிந்து மக்கள் ஒன்றுபடும்போதுதான் உண்மையான சுதந்திரம் கிடைக்கும் என்று அவர் குறிப்பிட்டார். மகாத்மா காந்தி தலைமையில் மக்கள் ஒன்றுபட்டதன் விளைவாகவே 1947-ல் இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்ததாகவும், அந்தச் சுதந்திரத்தைப் பாதுகாத்து அடுத்த கட்டத்துக்கு நாட்டை முன்னேற்ற வேண்டும் என்றும் கூறினார்.
தமிழ்நாட்டை லஞ்சம் மற்றும் ஊழலில் இருந்து மீட்டெடுப்பதும் ஒரு வகையான விடுதலைதான் என்று குறிப்பிட்ட விஜய், வெளிப்படையான, நேர்மையான, ஊழலற்ற நிர்வாகத்தை உருவாக்க தனது அரசு செயல்பட்டு வருவதாகத் தெரிவித்தார். லஞ்சமற்ற நிர்வாகம், போதைப்பொருள் இல்லாத தமிழகம், பெண்கள் பாதுகாப்பு மற்றும் சமூகநீதி ஆகியவற்றை அரசின் முக்கிய நோக்கங்களாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
மத்திய அரசுடனான உறவு குறித்துப் பேசிய முதல்வர், தமிழக மக்களின் நலன் சார்ந்த நிர்வாக விஷயங்களில் மத்திய அரசுடன் ஒத்துழைப்போம் என்றும், அதே நேரத்தில் தமிழகத்தின் நலனுக்கும் மாநில உரிமைகளுக்கும் எதிரான எந்த முடிவாக இருந்தாலும் அதில் சமரசம் செய்ய மாட்டோம் என்றும் உறுதிபடத் தெரிவித்தார்.
முந்தைய ஆட்சிகளால் கொண்டுவரப்பட்ட மக்கள் நலத் திட்டங்களையும் தொடர்ந்து செயல்படுத்துவோம் என்று கூறிய விஜய், ‘அம்மா உணவகம்’ உள்ளிட்ட திட்டங்களைத் தொடர்ந்து செயல்படுத்தி வருவதாகத் தெரிவித்தார். பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டம் 6 முதல் 8-ம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்பட்டு, வரும் செப்டம்பர் 17-ம் தேதி பெரியார் பிறந்த நாளில் தொடங்கப்படும் என்றும் அறிவித்தார்.
மேலும், தமிழகத்தை ஊழலற்ற மாநிலமாக மாற்றுவதுடன், வளர்ந்த நாடுகளுக்கு இணையான நிலைக்கு மாநிலத்தை கொண்டு செல்வதே அரசின் இலக்கு என்றும் முதல்வர் விஜய் தெரிவித்தார். 2036-ம் ஆண்டுக்குள் தமிழகத்தின் பொருளாதாரத்தை 1.5 டிரில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு உயர்த்தும் இலக்கையும் அவர் முன்வைத்தார்.
சுதந்திர தின உரையின் முடிவில், தேர்தலில் வாக்களிப்பதுடன் மக்களின் பணி முடிந்துவிடுவதில்லை என்றும், அரசின் மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்த தொடர்ந்து மக்களின் ஆதரவு தேவை என்றும் விஜய் கேட்டுக்கொண்டார்.
கருத்துகள் (0)
ஏற்றுகிறது…
தொடர்புடைய கட்டுரைகள்

2050க்குள் 720 சதுர கி.மீ வனப்பகுதியை தமிழ்நாடு இழக்கும்! என்ன சொல்கிறது அண்ணா பல்கலை ஆய்வு?
16 ஆகஸ்ட், 2026

