தமிழகத்தில் ரூ.4,000 கோடி கூடுதல் முதலீடு: டெய்ம்லர் இந்தியா (பாரத் பென்ஸ்) அறிவிப்பு
4000 கோடி முதலீடு எவ்வளவு தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு வேலையைக் கொண்டுவரும் என்பதைப் பார்க்க வேண்டும்..

சென்னை: ‘பாரத் பென்ஸ்’ வர்த்தக வாகனங்களைத் தயாரித்து வரும் டெய்ம்லர் இந்தியா கமர்ஷியல் வெஹிகல்ஸ் (DICV) நிறுவனம், தமிழகத்தில் தனது அடுத்தகட்ட வளர்ச்சியை விரிவுபடுத்த ரூ.4,000 கோடி கூடுதல் முதலீடு செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.
தமிழகத்தில் நடைபெற்ற முதலீட்டாளர் மாநாட்டின் போது, இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை தமிழக அரசுடன் டெய்ம்லர் இந்தியா மேற்கொண்டது. இந்தப் புதிய முதலீட்டின் மூலம் பாரத் பென்ஸ் வாகனங்களுக்கான புதிய தயாரிப்புகள் மற்றும் தொழில்நுட்பங்களை உருவாக்குதல், உற்பத்தித் திறனை விரிவுபடுத்துதல், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பணிகளை வலுப்படுத்துதல், தொழிற்சாலை உள்கட்டமைப்பை மேம்படுத்துதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
இந்த முதலீட்டின் மூலம் தமிழகத்தில் சுமார் 400 பேருக்கு நேரடி வேலைவாய்ப்புகள் உருவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய முதலீட்டுக்குப் பிறகு இந்தியாவில் டெய்ம்லர் நிறுவனத்தின் ஒட்டுமொத்த முதலீடு ரூ.14,500 கோடியைத் தாண்டும்.
சென்னை அருகே ஒரகடத்தில் 400 ஏக்கர் பரப்பளவில் டெய்ம்லர் இந்தியாவின் ஒருங்கிணைந்த உற்பத்தி மற்றும் ஆராய்ச்சி மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு 4,000-க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். இந்த வளாகத்தில் பாரத் பென்ஸ் உள்ளிட்ட வர்த்தக வாகனங்கள் தயாரிக்கப்படுவதுடன், இந்தியாவில் உருவாக்கப்படும் வாகனங்கள் வெளிநாட்டு சந்தைகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. டெய்ம்லரின் ஒரகடம் தொழிற்சாலை தற்போது 60-க்கும் மேற்பட்ட சர்வதேச சந்தைகளுக்கான ஏற்றுமதி மையமாகவும் செயல்படுகிறது.
டெய்ம்லரின் இந்திய உற்பத்தி சூழலின் முக்கிய பலங்களில் ஒன்று உள்ளூர் உதிரிபாக உற்பத்தி வலையமைப்பு. பாரத் பென்ஸ் வாகனங்களுக்கான உதிரிபாகங்களில் 92 சதவீதத்துக்கும் அதிகமானவை இந்தியாவிலேயே உள்ளூர் மயமாக்கப்பட்டுள்ளன. 400-க்கும் மேற்பட்ட சப்ளையர்களைக் கொண்ட இந்த விநியோகச் சங்கிலி, தமிழகத்தின் ஆட்டோமொபைல் உதிரிபாகத் தொழிலுக்கும் முக்கிய பங்களிப்பை வழங்குகிறது.
இந்த புதிய முதலீடு மூலம் பாரத் பென்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பு வரிசையை விரிவுபடுத்துவதுடன், இந்திய வர்த்தக வாகன சந்தையில் புதிய தொழில்நுட்பங்களைக் கொண்டுவரவும் டெய்ம்லர் திட்டமிட்டுள்ளது. குறிப்பாக கட்டுமானம், சுரங்கம், சரக்கு போக்குவரத்து உள்ளிட்ட துறைகளில் வர்த்தக வாகனங்களுக்கான தேவை அதிகரித்து வரும் நிலையில், உற்பத்தி மற்றும் ஆராய்ச்சி திறனை ஒரே நேரத்தில் வலுப்படுத்துவது நிறுவனத்தின் நீண்டகால வளர்ச்சித் திட்டத்தின் முக்கிய பகுதியாக பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் டெய்ம்லர் வாகனங்களின் உள்ளூர்மயமாக்கல் ஏற்கெனவே 92 சதவீதத்துக்கு மேல் உள்ள நிலையில், புதிய முதலீடு தமிழகத்தை மையமாகக் கொண்ட அதன் உற்பத்தி மற்றும் சப்ளை செயின் சூழலை மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் புதிய வேலைவாய்ப்புகள் மட்டுமின்றி, உள்ளூர் உதிரிபாக உற்பத்தியாளர்கள் மற்றும் தொடர்புடைய குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கும் கூடுதல் வாய்ப்புகள் உருவாகும்.
கருத்துகள் (0)
ஏற்றுகிறது…
தொடர்புடைய கட்டுரைகள்

இந்திய அஞ்சல் துறையில் 2,095 காலிப் பணியிடங்கள்: 10ம் வகுப்பு தேர்ச்சி போதும்!
29 ஆகஸ்ட், 2026
NEET 2027 உயிரியல்: 360/360 மதிப்பெண் பெற 10 'ஸ்மார்ட்' சூத்திரங்கள்!
24 ஆகஸ்ட், 2026
2050க்குள் 720 சதுர கி.மீ வனப்பகுதியை தமிழ்நாடு இழக்கும்! என்ன சொல்கிறது அண்ணா பல்கலை ஆய்வு?
16 ஆகஸ்ட், 2026