/
NFNEWSFELT
இந்தியா

சோனியா காந்தியின் ‘Belonging: A Journey of Love’ | உலகம் எதிர்பார்க்கும் சுயசரிதை!

சோனியா காந்தியே எழுதிய சுயசரிதையின் மீது தேசத்தின் கண்களும் உலகின் பார்வையும் விழக் காத்திருக்கின்றன. அதன் உள்ளடக்கம் உருவாக்கப் போகும் பூகம்பம்..

தேவகுமாரன் திருவள்ளுவன்
தேவகுமாரன் திருவள்ளுவன்19 ஆகஸ்ட், 20269 நிமிட வாசிப்பு28 பார்வைகள்
பகிர்:

சோனியா காந்தி வெறும் அரசியல் ஆளுமை மட்டுமல்ல, இந்தியாவின் மருமகள் ஆனால் அந்நியர் என்கிற நிழல் அவர் மீது படிந்திருக்கிறது. தேசியக் கட்சிகள் வடிவமைக்கும் அதிகார அரசியல் சித்திரங்கள், எவ்வாறு நம் பார்வையை வடிவமைக்கின்றன என்பதற்கு ஒரு வாழும் உதாரணம் திருமதி சோனியா காந்தி. காலம், வரலாறு, அனுபவம் இவை மூன்றும் சேர்ந்து, ஒருவரைப் பற்றிய நம் முன் கணிப்புகளை மீண்டும் சிந்திக்கவும் மாற்றியமைக்கவும் வைத்திருக்கின்றன என்பதற்கான எடுத்துக்காட்டவும் அவர் இருக்கிறார்.

இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்திலும் செல்வாக்குச் செலுத்தும் அரசியல் கட்சியொன்றில் சார்பு மனப்பான்மையுடன் இணைந்திருந்த பெரும்பான்மையான இந்தியக் குடிமக்கள், நேரு-காந்தி குடும்பத்தைக் குறித்த ஓர் எதிர்மறைச் சித்திரத்தையே பெரும்பாலும் மரபாகவே மனதில் வரைந்துகொண்டவர்கள். திராவிட, இடதுசாரிக் கட்சிகள், வட இந்திய மொழிவாரி மாநிலங்களில் சாதி மற்றும் வட்டாரச் சித்தாந்தங்களைக் கோட்பாடாகக் கொண்ட கட்சிகள் ஆகியவற்றுடன் ஒப்பிடும்போது பாரதிய ஜனதா கட்சி அதன் சிந்தனையில் முற்றிலும் வேறுபட்டது. என்றாலும், காந்தி குடும்பத்தை விமர்சிப்பதில் ஒவ்வொரு காலகட்டத்தில் இந்த அரசியல் சார்புடைய மக்களும் கட்சிகளின் தலைவர்களும் ஒவ்வொரு மொழியில் பேசி வந்துள்ளனர். குறிப்பாக, சோனியா காந்தி, பூர்வீக ரீதியாக இன ரீதியாக எளிதாகக் குறி வைத்துத் தாக்கப்படும் இலக்காக மாறினார்.

அவரது இத்தாலிய வேர்கள் கேலி செய்யப்பட்டன. ராஜீவ் காந்தி உடனான உறவு வதந்திகளாகச் சுருக்கப்பட்டன. கேம்பிரிட்ஜ் காலம் பரிதாபமான கேலிச் சித்திரங்களாக மாற்றப்பட்டன. போர்பர்ஸ் பீரங்கி பேர ஊழல் கூட அவருடன் தொடர்புப்படுத்தப்பட்டது. அரசியல் அனுபவமற்றவர், இந்தியாவைப் புரிந்துகொள்ள முடியாதவர் எனப் பல குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டன.


ராஜீவ் காந்தி படுகொலைக்குப் பின், அவர் மறைவின் பின்னால் காங்கிரஸின் மக்களுக்கான அரசியலைக் கட்டுப்படுத்தும் ‘அதிகார மையம்’ எனச் சித்தரிக்கப்பட்டார். ஒருகட்டத்தில், அரசியல் ஒழுக்கத்தைப் பற்றிப் பேசும் ஊடகவியலாளர்களும் கூட ‘பி.வி.நரசிம்ம ராவ், சோனியாவை பெரும் அச்சுறுத்தலாகவே பார்க்கத் தொடங்கினர்’ என அப்போது எழுதினர்.

ஆனால் காலம் மாறியது. ஒரே ஒரு நிகழ்வு காரணமாக அல்ல; அவரை மூன்று பத்தாண்டுகளாகக் கவனித்துவரும் அரசியல் சார்புடைய இந்தியக் குடிமகன்களாக இருந்தாலுமே கூட, ‘அதிகாரத்திற்காக அல்லாமல், வாழ்க்கையின் ஓட்டத்துக்கு எதிராகவே பொதுவாழ்க்கையில் நுழைந்த ஒரு பெண்மணி, இந்திய மரபிலும் காலச்சாரத்திலும் ஆழ்ந்து கரைந்து போய்விட்டார்’ என்பதை உணர்ந்தனர். திருமதி சோனியா இத்தாலியராக இருக்கலாம். ஆனால், அவரை இத்தாலியர் எவரும் இப்போது இந்தியராகவே பார்க்கிறார்கள்.

உலகின் மிகச் சக்திவாய்ந்த அரசியல் குடும்பங்களில் ஒன்றில் திருமணம் செய்து கொண்டவர். சர்வதேச அரங்கில் நாட்டின் செல்வாக்கிற்கும் உள்நாட்டு மாற்றங்களுக்கும் வளர்ச்சிகளுக்கும் காரணமாக இருந்த தன்னுடைய அத்தை இந்திரா காந்தியை இழந்தார். பின்னர் கணவர் ராஜீவ் காந்தியையும் இழந்தார். தனிப்பட்ட வாழ்க்கையை அரசியல் வன்முறை சிதைத்தபோதும், கசப்பாக மாறாத மனநிலையை அவர் தக்க வைத்திருந்தார். அதுவே அவரை இந்தியாவின் தலை சிறந்த தலைவர்களில் ஒருவராக மட்டுமல்ல, இந்தியாவின் தலைசிறந்த ஞானமான ‘அமைதி’ என்கிற சிறந்த அணிகலனை அணிந்தவராக உயர்ந்தார்.

அவர் அரசியலுக்குத் தாமதமாக வந்தார். கற்றார். கேட்டார். மாறினார். முக்கியமாக, ‘குடும்ப அரசியல் பாரம்பரியம் ஒன்று மட்டுமே நாட்டின் உயர்ந்த பதவிக்குத் தகுதி அளிக்கிறது’ என்கிற மனப்பான்மையை அவர் ஏற்கவில்லை.

2004ஆம் ஆண்டு, கூட்டணி வெற்றி பெற்றபோது, பிரதமராக வர வாய்ப்பு இருந்தும், அவர் அந்தப் பதவியை மறுத்தார். காரணம், ‘அதிகாரமும் பதவியும் தனது இலக்கு அல்ல; மதச்சார்பற்ற இந்தியாவையும் ஏழை மக்களின் நலனையும் காக்கவே விரும்புகிறேன்’ என்றார். வரலாறு இதை விவாதிக்கலாம். ஆனால் அந்தத் தருணத்தில் சோனியாவின் மறுப்பு, அவரை உலகின் மிகச் சிறந்த பெண்மணிகளில் ஒருவராக அடையாளம் காட்டியது. அந்தத் தருணத்தை இந்தியா ஒருபோதும் மறக்கவில்லை.

அந்த முக்கியமான அரசியல் தருணத்தில் அவர் மன்மோகன் சிங்கைத் தேர்ந்தெடுத்தார். பொருளாதார நிபுணர், அறிஞர், அரசியல் குடும்பத்தைச் சாராதவர். அவரின் மகத்தான அந்தத் தீர்மானம், அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்வதற்கான ஒரு புதிய அரசியல் மொழியை இந்திய அரசியல் பண்பாட்டில் உருவாக்கியது.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி (UPA) ஆட்சிக் காலத்தில் உருவான பல சட்டங்கள், குறிப்பாக மகாத்மா காந்தி ஊரக 100 நாள் வேலை வாய்ப்புத் திட்டம் (MGNREGA), பழங்குடி மக்களுக்கு உரிமை வழங்கும் வன உரிமைச் சட்டம், நிலம் கையகப்படுத்தல் சட்டம் என பல முக்கிய சட்டங்கள் எளிய மக்களின் வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்தின. பயிரிட்ட செலவைக் கூட விளைச்சலில் எடுக்க முடியாத குறு விவசாயிகள், வாழ்விடத்திலிருந்து துரத்தப்படும் மலைவாழ், வன வாழ் பழங்குடி மக்கள், பஞ்சம் பிழைக்க மாநிலம் பெயர்ந்த ஏழை மக்கள் ஆகியோரின் வாழ்க்கையைக் கூர்ந்து கவனித்து அவர்களது வாழ்க்கையை ஆவணப்படுத்தும் எந்தவொரு இதழியலாளனும் இந்தியா எதிர்கொண்டு பலனடைந்த மன்மோகன் ஆட்சி காலத்தின் இந்த மாற்றங்களின் பலனை உணர்ந்திருப்பான்.

திருமதி சோனியா காந்தியின் அரசியல் என்பது, மதச்சார்பற்ற, மொழி, இன பன்மைத்துவம் கொண்ட இந்தியாவைப் பிரதிபலித்தது. மொழி, நிலம் கடந்த அறிவை மதிக்கும் பண்பும் அதில் இருந்தது. சீதாராம் யச்சூரி போன்றவர்களுடன் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், அது தனிப்பட்ட பகையாக மாறவில்லை. ஜனநாயகத்தின் உண்மையான பண்பே அதுதானே..

காங்கிரஸ் அரசியலின் பின்னால் நேரு குடும்பத்தின் மூத்த மருமகளாக அவர் நின்றாலும், தாய், கைம்பெண், தாம் வாக்கப்பட்ட குடும்ப பாரம்பரியத்தைத் தாங்கி அதுவாகவே மாறிய ஓர் அந்நியப் பெண் என்கிற அவருடைய பரிமாணங்களில் அவர் தன்னை எளிய மனுஷியாக அடையாளப்படுத்தி வந்திருக்கும் இந்த ஆண்டுகளில், பாரதிய ஜனதா கட்சியின் பாரிய எழுச்சியை அவர் அமைதியாகவே எதிர்கொண்டு வந்திருக்கிறார். தேர்தல் வழியான மக்களின் முடிவை அவர் முழுமனதாக மனதில் தாங்கி மதித்து வந்திருக்கிறார். இந்த சகிப்புப் பண்புதான் இந்தியாவின் மற்ற தலைவர்களிடமிருந்து அவரை வேறுபடுத்துகின்றது. இதே பண்புடன் இன்று இந்திய அரசியலில் நம்பிக்கை நட்சத்திரங்களாக விளங்கும் தன்னுடைய பிள்ளைகள் ராகுல் காந்தி - பிரியங்கா காந்தி இருவரையும் பொது வாழ்க்கையின் கடுமையான பக்கங்களிலிருந்து அவர் ஒரு தாய்ப் பறவையைப் போல் காப்பாற்றிய விதமும் கவனிக்கத்தக்கது.

சோனியா காந்தி கடந்து வந்திருக்கும் அவருடைய பொது வாழ்க்கையை நினைக்கும் போது, அவர் தன்னுடைய 79ஆம் வயதில் எழுதி முடித்திருக்கும் தனது சுயசரிதைப் புத்தகத்துக்குச் சூட்டப்பட்டிருக்கும் தலைப்பில் இடம்பெற்றுள்ள ‘Belonging’ என்கிற முதல் சொல்லே ஆழமாக மனதைத் தொடுகிறது. இத்தாலியில் பிறந்தவர், ‘இந்தியாவைச் சேர்ந்தவர் அல்ல’ என்று புண்படுத்தப்பட்டவர், இறுதியில் இந்திய அரசியல் உணர்வின், இந்தியக் குடும்பப் பண்பாட்டு உணர்வின் ஓர் அங்கமாக மாறி நிற்கிறார். அவர் ஒருபோதும் தன்னையொரு ராணியாக முன்னிறுத்திக் கொள்ளாத நிலையில், அதைவிடப் பொறுப்பு மிக்க, ஒரு தேசியக் கட்சியின் அதிகாரம் கையிலிருந்தும், நாட்டின் மிக உயரிய பதவிக்கு அவர் முன்மொழியப்பட்டபோதும் அவற்றுக்காக மயங்காதவர். இழப்புகளைக் கடந்து தன் சொந்தக் குழந்தைகள், குடும்பத்தினரிடமும் காங்கிரஸ் கட்சியை குடும்பமாகப் பார்க்கும் அதன் தொண்டர்களிடமும் நம்பிக்கையை இப்போது வரை தக்க வைத்திருப்வர்.

அப்படிப்பட்டவரின் சுயசரிதை மீது தேசத்தின் கண்களும் உலகின் பார்வையும் விழக் காத்திருக்கின்றன. அவரது வாழ்க்கைப் புத்தகம் நிச்சயமாகப் பாடநூல்போல் இருக்கவோ ஒரு புனைவு நாவலைப் போல் இருக்கவோ வாய்ப்பே இல்லை. அது பல உண்மைகளை வெளிப்படுத்தும் மனம் திறந்த மேடையாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம். அவர் இந்தியாவின் மருமகளாகவும் ஒரு தேசியக் கட்சியைக் கட்டிக்காக்கும் தலைவியாகவும் தான் கொடுக்க வேண்டியிருந்த விலைகளை உறுதியாக அதில் வெளிப்படுத்தியிருப்பார் என்று எதிர்பார்க்கலாம். நவம்பர் 10, 2026இல் அந்த நூல் வெளியாகும் நாளில் தேசம் அதனுள் கண்களைக் குவிக்கக் காத்திருக்கும்.

பகிர்:
தேவகுமாரன் திருவள்ளுவன்

எழுத்தாளர் குறிப்பு

தேவகுமாரன் திருவள்ளுவன்

சிறப்புக் கட்டுரையாளர்

தேவா என ஊடக உலகிலும் வாசகர் நடுவிலும் அழைக்கப்படும் தேவகுமாரன் திருவள்ளுவன், முதுகலையில் இணைய இதழியல் பயின்றவர். நடுநிலை வழுவாத அரசியல் பார்வை, எதிர்காலத் தலைமுறையை மனதில் கொள்ளும் சுற்றுச்சூழல் எழுத்து, நல வாழ்வே அனைத்திலும் முதன்மையானது என்பதை வலியுறுத்தும் வாழ்வியல் எழுத்து, கிராமியமே நகரங்களை வாழவைக்கும் ஆன்மா என்பதில் ஆழமான கள ஆய்வு செய்து, தரவுகளோடு நிறுவும் எழுத்து ஆகியவற்றில் ஈடுபாட்டுடன் எழுதி வரும் இதழாளர். சென்னையில் 35 ஆண்டுகளாக வசிக்கும் இவரை, தமிழகத்தின் கிராமங்களில் கழுத்தில் தொங்கும் அவருடைய சோனி கேமராவுடன் அடிக்கடி காணலாம்.

@thirdeye1973@gmail.com

கருத்துகள் (0)

கருத்திட உள்நுழையுங்கள்.

ஏற்றுகிறது…

தொடர்புடைய கட்டுரைகள்