'தி டார்க் ஹெவன்' விமர்சனம் | யூகிக்கவே முடியாத த்ரில்லர் ஆட்டம்!
நிகழ்காலத்தில் நடக்கும் கதையில் ஒரு ஜூன் மாதத்தில் அந்த ஊருக்கு போலீஸ் இன்ஸ்பெக்டராக பணிமாற்றலாகி தன் மனைவி (தர்ஷிகா) அவர்களின் 1 வயது ஆண் குழந்தையுடன் அந்த ஊருக்கு வருகிறார் பாரி (பிக்பாஸ் புகழ் சித்து).

எதிர்பார்க்கும் புள்ளியிலெல்லாம் திசையை மாற்றி, கடைசி நிமிடம் வரை ஊகங்களுக்குச் சிக்காமல் நகரும் திரைக்கதை ஒரு அரிய கலை. ஆனால், அதிரடித் திருப்பங்கள் தரும் அதிர்ச்சியை விட, ‘இது சாத்தியம்தானே’ என்று மூளையை ஒப்புக் கொள்ள வைக்கும் கச்சிதமான தர்க்கமே அதை வெல்ல வைக்கிறது. தையல் தட்டாத அந்தத் தர்க்கவியலும், மூச்சை அடைக்கும் விறுவிறுப்பும் ஒன்றாக இணையும்போது, ஒரு த்ரில்லர் சினிமா வெறும் பொழுதுபோக்காக இல்லாமல் இணையற்ற திரைக்காவியமாக உருவெடுக்கிறது. அத்தகைய கச்சிதமான கதைப்பின்னலால் உருவாகும் பேரனுபவத்தை விவரிக்க வார்த்தைகளே வியந்து நிற்கின்றன. வாருங்கள் .. 'தி டார்க் ஹெவன்' தந்த திரை அனுபவம் எத்தகையது என்று பார்க்கலாம்:
திருநெல்வேலி மாவட்டத்தில் மேக்கரை என்கிற கிராமம். அங்கே கிறிஸ்தவர்களும் இந்துக்களும் முஸ்லீம்களும் தமிழர்கள் என்ற ஒற்றுமை உணர்வுடன் வசிக்கிறார்கள். கேரள எல்லை என்பதால் மலையாளிகளின் வருகையும் அங்கே உண்டு. அந்தக் கிராமத்தில் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சம்பவம் நிகழ்ந்ததாக நம்புகிறார்கள் .அதன்படி அந்த ஊரில் 18 வயது வனமங்கை என்ற ஓர் கன்னிப் பெண் இருந்தாள். அந்த ஊரில் மழை பெய்யாத போது அவள் தவம் இருந்ததால் மழை பெய்தது. அதனால் சக மனுஷியாக இருந்தாலும் அவளை ஊர்மக்கள் தெய்வமாக மதிக்கிறார்கள். இந்நிலையில் அந்த வனமங்கையை அதே மக்கள் அவளது குடிசையுடன் தீயிட்டு எரித்துவிடுகிறார்கள். அதற்கு அவளது காதலும் கர்ப்பமும் காரணம் என்று அவள் எதிரிகள் கட்டிவிட்ட கட்டுக்கதையையே அவளை காவு வாங்கிவிடுகிறது. இதன்பின் வனமங்கை சாகும்முன் ‘நான் உயிர்விடும் இந்த ஜூன் மாதம் உங்களை விடாது துரத்தும்’ என்று சபிக்கிறாள். அவளது சாபம் நிகழ்காலம் வரைத் தொடர்வதை அறிந்து மேக்கரை மக்கள் வனமங்கையின் மன்னிப்புக்கோரி பரம்பரை பரம்பரையாக அவளை நம்பி வழிபடுகிறார்கள்.
நிகழ்காலத்தில் நடக்கும் கதையில் ஒரு ஜூன் மாதத்தில் அந்த ஊருக்கு போலீஸ் இன்ஸ்பெக்டராக பணிமாற்றலாகி தன் மனைவி (தர்ஷிகா) அவர்களின் 1 வயது ஆண் குழந்தையுடன் அந்த ஊருக்கு வருகிறார் பாரி (பிக்பாஸ் புகழ் சித்து). அவர் வந்ததுமே ஒரு ஜூன் மாதத்தில் அங்கு எந்த தடயமும் இல்லாமல் தொடர் கொலைகள் நடக்கின்றன. கொலயாளியை கண்டுபிடிப்பதற்கு காவல் ஆய்வாளர் பாரி களத்தில் இறங்குகிறார் . ஆனாலும் கண்டுபிடிப்பது எளிதில் புரியாத புதிராக உள்ளது. ஒரு கட்டத்தில் அவரது குடும்பமே இதனால் பாதிக்கப்படுகிறது. மன அழுத்தத்தில் பணிகள் பாதிக்கப்படுகிறது. இதனால் அவர் பணியிடைநீக்கம் செய்யப்படுகிறார். இந்த நிலையிலும் அவர் தனது பணியைத் தொடர்கிறார் . கேரளாத்தின் சிறையிலிருந்து தப்பித்த சைக்கோ கொலையாளி மேக்கரைக்கு வந்துவிட்டான என்கிற திருப்பமும் அதைத்தாண்டி வனமங்கையின் சாபாமும் எது இந்த ஊரின் பலிகளுக்குக் காரணம் என்பதை இன்ஸ்பெக்டர் பாரி கண்டுபிடித்தாரா இல்லையா என எந்த இடத்திலும் நில்லாமல் 147 நிமிடங்கள் விறுவிறுவென நகர்கிறது!
கொலையாளி யாராக இருக்கும் என்று பலர் மீது சந்தேகங்களை எழுப்பிக் கொண்டே முதல் பாதி படம் முழுக்க மர்ம முடிச்சுகளை போட்டுக் கொண்டே செல்கிறார் இயக்குநர் பாலாஜி. பிறகு அந்த முடிச்சுகள் அவிழும்போது அவர் அல்ல இவராக இருக்குமோ என்று நம் சந்தேகத்திற்கும் நிஜத்துக்குமாக அட்டகாசமான கண்ணாமூச்சி ஆட்டம் ஆடி உள்ளார் இயக்குநர். இறுதிவரை அந்த பரபரப்பைத் தக்க வைத்து மர்மத்தையும் புதிரையும் தொடர வைத்துள்ளது இயக்குநரின் சாமர்த்தியம் என்றே கூற வேண்டும். ஒவ்வொரு பாத்திரத்தின் மீதும் நமது சந்தேகம் படியும் போது அவரல்ல என்று இவராக இருக்குமோ என்று மாற்றி மாற்றி நம் கவனத்தைத் திசை திருப்புவது நல்ல திரைக்கதை ஆட்டமாக இருக்கிறது. அந்தத் தீவிரத்தை இறுதிவரை தொடர வைத்துள்ளது இயக்குநர் அமைத்துள்ள திரைக்கதையின் வெற்றி என்றுதான் கூற வேண்டும்.
இப்படத்தில் இளம்பாரி என்கிற காவல் ஆய்வாளர் பாத்திரத்தில் பிக் பாஸ் புகழ் சித்து நடித்துள்ளார். காவல்துறையின் பணியழுத்தம் தனிப்பட்ட முறையில் அவர் குடும்ப இழப்பு என்ற பல வலிகளையும் அவமானங்களையும் மேல் அதிகாரியின் ஆணவச் சீண்டல்களையும் தாங்கிக் கொண்டு அதைக் காட்டிக் கொள்ளாமல் அலட்டல் இல்லாமல் உள்ளத்தின் அழுத்தத்தை மட்டும் முகத்தில் காட்டிக் கொண்டு சிறப்பாக நடித்துள்ளார் .அவர் ஆர்ப்பாட்டம் இல்லாமலேயே ஆவேச வசனங்கள் இல்லாமலேயே அந்த பாத்திரத்தின் உணர்வுகளை கண்முன் கொண்டு வந்துள்ளார். கனி பாத்திரத்தில் நடித்திருக்கும் இன்னொரு பிக் பாஸ் புகழ் ரித்விகா நல்லவரா கெட்டவரா என்று அறிய முடியாத அளவிற்கு முகத்தில் ஒரு மர்ம சாயலை வைத்துக்கொண்டு அந்தக் கதாபாத்திரத்தில் மிளிர்கிறார். அவரது பாத்திரத்தின் மர்மம் இறுதிக்காட்சிகளில் அவிழ்கிறது.
இன்னொரு பிக் பாஸ் முகமான தர்ஷிகா சித்துவின் மனைவியாக நடித்திருக்கிறார் .சுடர் விடும் கண்களில் ஏதோ அமானுஷ்யப் பின்னணி இருக்குமோ என்று அச்சமூட்டும் வகையில் அவரது தோற்றம் இருக்கிறது. படத்தில் அவருக்கு ஏற்பட்ட முடிவும் யாரும் எதிர்பாராதது.
இந்தப் படத்தில் சித்துவுடன் பணியாற்றும் காவலராக அழகு கதாபாத்திரத்தில் பிரதீப் நடித்திருக்கிறார்.எதிர்பாராத மர்மங்களைக் கொண்ட தனது பாத்திரத்தில் தன்னை உணர்ந்து குறை இல்லாமல் செய்திருக்கிறார்.அந்தப் பாத்திரச் சித்தரிப்பு வேறுவித பரிமாணம் கொண்டதாக இருக்கிறது.
ஜெயக்குமார் இன்னொரு காவலராக நடித்திருக்கிறார். அவரது பாத்திரத்திலும் குணச்சித்திரம் புகை மூட்டம் கொண்டதாக இருக்கிறது.அவரும் தனது நடிப்புக் கடமையைச் சரியாகச் செய்துள்ளார். படத்தில் தோன்றும் பலவிதமான பாத்திரங்களின் மீதும் மர்மப் புகை சூழ விட்டுப் பிறகு அதைத் தெளிவுபடுத்தி இருப்பது இயக்குநரின் சாமர்த்தியத்தைக் காட்டுகிறது .மிரட்டல் விழிகளுடன் வரும் வேல ராமமூர்த்தி இதில் வித்தியாசமான குணச்சித்திர வேடம் ஏற்றுள்ளார்.நிழல்கள் ரவி டாக்டராக வருகிறார். வழக்கமாக நகைச்சுவை வேடங்களில் நடித்து வரும் சாப்ளின் பாலு இதில் வித்தியாசமான தோற்றத்தில் வருகிறார்.
இப்படிப் படத்தில் துணைக் கதாபாத்திரங்களில் வருபவர்கள் அனைவரும் அவர்களுக்குக் கொடுத்த வேலையைக் குறை இல்லாமல் செய்திருக்கிறார்கள் படத்தின் வரும் காட்சிகள் பெரும் பகுதி இரவில் தான் நடக்கின்றன. இரவில் அந்த நிழலும் ஒளியும் கலந்த அந்த தோற்றமே படத்திற்கு ஒரு திகில் அனுபவத்தைத் தருகிறது.அந்த வகையில் ஒளியமைப்பைப் பயன்படுத்தி ஒளிப்பதிவு செய்து இருக்கிறார் மணிகண்டன் பிகே. இதுவரை கேமரா வெளிச்சம் படாத பல இடங்களில் தேடிப் பிடித்துப் படப்பிடிப்பு செய்துள்ளார்கள்.
படத்தில் குறிப்பிட்டு சொல்ல வேண்டிய இன்னொரு அம்சம் இசை. ஒரு திகில் படத்திற்கு மர்மம் சூழ்ந்த படத்திற்கு அந்த மர்மத்தை இறுதிவரை கலையாமல் குலையாமல் காப்பாற்றிச் சென்றிருக்கிறது சக்தி பாலாஜியின் பின்னணி இசை.அது மட்டுமல்ல ஒரு திகில் படத்திற்கு பாடல் காட்சிகள் தேவையில்லை என்பார்கள் .ஆனால் இதில் இடம்பெறும் 'அம்மாடி ஆலமரம் வேரோடு சாஞ்ச தென்ன' பாடலும் 'கொடியவன் குலை நடுங்க' பாடலும் சூழலின் தீவிரத்தை உணர்த்துகின்றன. படத்தில் கதை மாந்தர்கள் மட்டுமல்ல பின்புலமும் ஒரு பாத்திரம் போலவே உணர வைக்கிறது. காவல் நிலையம் ,காடு ,மேடு , மலை, மழை என்று அந்த இருளும் புதிரும் சூழ்ந்த அந்தப் பின்புலங்கள் படத்திற்கு அமானுஷ்ய உணர்வைத் தருகின்றன.
காதல், நம்பிக்கை, மாயை, நாட்டார் பண்பாடு, சந்தேகம்,துரோகம். பிள்ளைப் பாசம் ,பழிவாங்கல் என அனைத்து உணர்வுகளும் வெளிப்படுத்தும் காட்சிகள் உள்ளன. படம் ஆரம்பித்தது முதல் இறுதி வரை தளர்வு தொய்வில்லாமல் படத்தொகுப்பு செய்துள்ளார் படத்தொகுப்பாளர் ராஜா அறுமுகம்.
'தி டார்க் ஹெவன்' என்றால் என்ன? 'தி டார்க் ஹெவன் என்பது பல மர்மங்கள் அடங்கிய ஒரு புத்தகம். அதில் எழுதப்பட்டு உள்ளது போல் நடப்பதாகவே கதை தொடங்குகிறது. அப்புத்தகத்தை முழுதும் படித்தவர்கள் உயிருடன் இருக்க மாட்டார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. இப்படித் தொடங்குகிற கதை கடைசி வரை அந்தப் பரபரப்பை தக்க வைத்து முழுமையான புலாணாய்வு த்ரில்லராக ஏமாற்றம் அளிக்காத திரை அனுபவத்தைக் கொடுத்து அசரடிகிறது படம்
மதிப்பெண் 3.7/5
கருத்துகள் (0)
ஏற்றுகிறது…



