/
NFNEWSFELT
OTT

த லாஸ்ட் அவுஸ்: நெட்ஃபிளிக்ஸ் | திரைக்கதையின் பொறுப்பின்மைக்கு இவ்வளவு வரவேற்பா?

நம்முடைய வீட்டை வந்தடைவதுதான் பாதுகாப்பு என்று நினைக்கிறோம்.. ஆனால், அந்த வீடே நம்மை வேட்டையாடினால் எங்கே அடைக்கலம் புகுவது?

ராக் ஸ்டார்
ராக் ஸ்டார்7 ஆகஸ்ட், 20264 நிமிட வாசிப்பு4 பார்வைகள்
பகிர்:

நெட்ஃபிளிக்ஸ் தளத்தின் ஒரிஜினல் ஆங்கில உள்ளடக்கங்களில் ஒன்றாக கடந்த 7ஆம் தேதி வெளியாகியுள்ளது The Last House (2026) திரைப்படம். ஒரு சாதாரண குடும்பத்தின் வீட்டை ‘பாதுகாப்பான இடம்’ என்பதிலிருந்து சில தீய சக்திகளின் ‘கண்ணி’யாக மாறும் சுவாரஸ்யமான கதைக் கருவை மையமாகக் கொண்ட ‘சயின்ஸ்-பிக்’ ஹாரர் முயற்சி.

ஒரு நாள் திடீரென, உலகமே மர்மமான சக்தியால் முடக்கப்பட்டதுபோல், ஒரு குடும்பம் அவர்களுடைய வீட்டுக்குள்ளேயே சிக்கிக் கொள்கிறது. வெளியே செல்ல முடியாது, ஜன்னல்களைத் திறக்க முடியாது, தகவல் தொடர்புகள் துண்டிக்கப்பட்டுவிடுகின்றன. குறைந்து கொண்டே வரும் உணவு, தண்ணீர், மனஅழுத்தம் ஆகிய சிக்கல்களோடு போராடிக் கொண்டு உயிர் பிழைக்க வேண்டிய கட்டாயம் உருவாகிறது. இந்த சற்றும் எதிர்பாராத ‘லாக்டவுன் ஹாரர்’ அமைப்பு, கோவிட் கால அனுபவங்களை நினைவூட்டும் வகையில் படமாக்கப்பட்டுள்ளது.

திரைப்படத்தின் முதல் பாதி தான் அதன் மிகப்பெரிய பலம். குடும்ப உறவுகள், பயம், ஒருவருக்கொருவர் சார்ந்து வாழ வேண்டிய நிலை போன்றவை நம்பத்தகுந்த முறையில் சித்தரிக்கப்படுகின்றன. குறிப்பாக Greta Lee மற்றும் Wagner Moura ஆகியோரின் நடிப்பு, ஒரு குடும்பத்தின் உளவியல் அழுத்தத்தை வலுவாக நமக்குக் கடத்துகிறது. இந்த இருவரின் நடிப்பே படத்தின் முதுகெலும்பு.

ஆனால், விறுவிறுப்பான தொடக்கம் இரண்டாம் பாதியில் மெதுவாக தளரத் தொடங்குகிறது. ஆரம்பத்தில் குடும்பம் தன்னிறைவு பெற முயலும் ‘சர்வைவல்’ டோன், பின்னர் அறிவியல்-புனைவு ஹாரர் கோணத்துக்கு திடீரென மாறுகிறது. வெளியுலகில் என்ன நடக்கிறது என்ற கேள்விக்கு கிடைக்கும் விளக்கங்கள், பல இடங்களில் லாஜிக்கையும் நம்பகத்தன்மையையும் இழக்க வைக்கின்றன.

மேலும், கதை நகரும் போதெல்லாம் புதிய விஷங்களை உள்நுழைத்துகொண்டே வந்தாலும், அவை ஒருங்கிணைந்து செய்திருக்க வேண்டிய மேஜிக் நிகழவில்லை. கடல்சார் உயிரினங்கள், மர்மமான மழை, இயற்கை பேரழிவு என இந்த எல்லா கூறுகளும் ஒன்றோடொன்று இணையும் விதம் பலவீனமாகத் தோன்றுகிறது. இதனால், ஒரு வலுவான ஒற்றை இலக்கு நோக்கி நகர்ந்திருக்க வேண்டிய கதை, குழப்பமான, பொறுப்பின்றி எழுதப்பட்ட திரைக்கதையால் தடுமாறுகிறது.

கிளைமாக்ஸ் பகுதியும் அதே பிரச்சினையைத் தொடர்கிறது. ஆரம்பத்தில் உருவாக்கப்பட்ட மர்ம முடிச்சுகளுக்கு, இறுதியில் திருப்திகரமான பதில்களை வழங்காமல் சிதறிப் போகிறது.


இதைத் தாண்டியும், The Last House முழுமையாக ‘என்கேஜ்’ செய்வதில் தோல்வியடைந்த படம் என்று சொல்ல முடியாது. அதன் மையக் கருத்து, ‘வீடு’ என்ற நமது பாதுகாப்பான இடம் கூட ஒருநாள் நமக்கு ஆபத்தான ஒன்றாக மாறலாம் என்ற பய உணர்ச்சியை தரும் இக்களம், பார்வையாளராக உங்களை உறுதியாக ஈர்க்கும். சில காட்சிகளில் உருவாக்கப்பட்ட மூச்சுத்திணற வைக்கும் பல ஜம்ப் ஹாரர் சூழல்களும் , குடும்ப உறவுகளின் உணர்ச்சிப் பிணைப்பும் படத்தைத் தாங்கிப் பிடித்திருக்கின்றன.

மொத்தத்தில், The Last House ஒரு சிறந்த ஐடியாவை கொண்டிருந்தாலும், அதை முழுமையாக செயல்படுத்தத் தவறிய படமாகத் தோன்றுகிறது. விறுவிறுப்பான முதல் பாதி, வலுவான நடிப்பு என சாதகமான அம்சங்கள் இருக்க, பலவீனமான திரைக்கதை மற்றும் குழப்பமான இறுதிப்பகுதிய ஆகியன அதனை பின்னால் தள்ளுகின்றன. அதனால், இதை ஒருமுறை பார்க்கலாம் என்ற வகையில் மட்டுமே பரிந்துரைக்கலாம். அதேநேரம், இவ்வளவு சாராசரிக்கும் குறைவான இத்திரைப்படம் எப்படி நெட்ஃபிளிக்ஸ் பார்வையாளர்களால் அதிகம் பார்க்கப்பட்ட ஒரு திரைப்படமாகத் தொடர்கிறது என்பது பெரிய மூடு மந்திரம்.

எச்சரிக்கை: 18 வயதைக் கடக்காத உங்கள் குழந்தைகள் பள்ளியில் இருக்கும்போதோ, அல்லது அவர்கள் வீட்டில் இல்லாதபோதோ இதை நீங்கள் பாருங்கள். அவர்களை இப்படம் தேவையற்ற பதற்றம் மற்றும் கார்டிசால் சுரப்பை ஊக்குவிக்கக் கூடும்.

மதிப்பீடு: 2.75 / 5

பகிர்:
ராக் ஸ்டார்

எழுத்தாளர் குறிப்பு

ராக் ஸ்டார்

சிறப்புக் கட்டுரையாளர்

ஊடகத் துறையில் 20 ஆண்டுகள் அனுபவம். பெண்ணரசியல், பெண் மொழி, தொழில்முனைவு இதழியல் ஆகியவற்றில் தேர்ந்த அறிவும் அனுபவமும் கொண்டவர். விரைந்து கட்டுரைகளை வழங்கும் ஆற்றல் கொண்டவர்.

@https://x.com/Newsfelt

கருத்துகள் (0)

கருத்திட உள்நுழையுங்கள்.

ஏற்றுகிறது…

தொடர்புடைய கட்டுரைகள்