இந்தியாவுக்கு யூரேனியம்: உஸ்பெகிஸ்தான் - இந்தியா புதிய ஆற்றல் கூட்டணி
இந்த உடன்பாடு எரிசக்தி துறையை மட்டும் சார்ந்ததல்ல; இந்தியா–உஸ்பெகிஸ்தான் உறவை “Comprehensive Strategic Partnership” என்கிற நிலைக்கு உயர்த்தலாம்.

மத்திய ஆசியாவில் இந்தியாவின் துரிதமான தூதரக நகர்வுகளுக்கு இடையே, உஸ்பெகிஸ்தானுடன் நீண்டகால அடைப்படையில் தங்கு தடையற்ற யூரேனியத்தை இந்தியாவுக்கு விநியோகிக்க ஒப்புக்கொண்டுள்ள ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி மேற்கொண்ட உத்தியோகபூர்வ விஜயத்தின் போது, தாஷ்கண்டில் உஸ்பெகிஸ்தான் அதிபர் ஷவ்கத் மிர்சியோயெவுடன் நடந்த இருதரப்பு பேச்சுவார்த்தைகளின் முக்கிய விளைவாக இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்த ஒப்பந்தத்தின் மூலம், இந்தியாவின் சிவில் அணுசக்தி திட்டங்களுக்கு தேவையான யூரேனியம் தேவையை நீண்டகால அடிப்படையில் உறுதி செய்யும் வகையில் ஒரு கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இந்தியா அணுசக்தி உற்பத்தியை விரிவுபடுத்தும் திட்டத்தில் இருக்கின்ற நிலையில், இத்தகைய வெளிநாட்டு விநியோக ஒப்பந்தங்கள் ஆற்றல் பாதுகாப்பில் முக்கிய பங்காற்றுகின்றன எனலாம்.
இந்த உடன்பாடு வெறும் எரிசக்தி துறையை மட்டும் சார்ந்ததல்ல; இந்தியா–உஸ்பெகிஸ்தான் உறவை “Comprehensive Strategic Partnership” என்கிற உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லும் ஒரு முக்கிய முன்னேற்றமாகவும் பார்க்கப்படுகிறது. இரு நாடுகளும் வர்த்தகம், முதலீடு, உள்கட்டமைப்பு, பாதுகாப்பு, டிஜிட்டல் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்த தீர்மானித்துள்ளன.
மேலும், 2030க்குள் இருநாடுகளுக்கிடையிலான வர்த்தகத்தை 5 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு உயர்த்தும் இலக்கும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது மத்திய ஆசியாவில் இந்தியாவின் பொருளாதார மற்றும் மூலோபாய தாக்கத்தை அதிகரிக்கும் முயற்சியாகக் கருதப்படுகிறது.
சர்வதேச அளவில், இந்தியா தனது அணுசக்தி உற்பத்தியை அதிகரிக்க பல நாடுகளுடன் யூரேனியம் ஒப்பந்தங்களை விரிவுபடுத்தி வருகிறது. உஸ்பெகிஸ்தானுடன் செய்யப்பட்ட இந்த புதிய ஒப்பந்தம், அந்த முயற்சியின் மேலும் ஒரு முக்கிய கட்டமாக பார்க்கப்படுகிறது. மொத்தத்தில், இந்த ஒப்பந்தம் இந்தியாவின் ஆற்றல் பாதுகாப்பை வலுப்படுத்துவதோடு, மத்திய ஆசியாவில் அதன் மூலோபாய உறவுகளை மேலும் ஆழப்படுத்தும் முக்கியமான முன்னேற்றமாக மதிப்பிடப்படுகிறது.
கருத்துகள் (0)
ஏற்றுகிறது…


