பிரிக்ஸ் உச்சி மாநாடு 2026: ‘புதுடெல்லி பிரகடனம்’ சொல்லும் புதிய உலக ஒழுங்கு - ஒரு விரைவுப் பார்வை
திருக்குறள் பரிசு, ராமேஸ்வரம் கோயில் பின்னணி போன்ற சின்னங்களின் மூலம், இந்தியா தனது பண்பாட்டு அடையாளங்களை உலக மேடையில் முன்னிறுத்தியது ஏன்?

டெல்லி பாரத் மண்டபத்தில் நடைபெற்ற 18-வது பிரிக்ஸ் உச்சி மாநாடு, ஒரு வழக்கமான தலைவர்கள் கூடுகையைக் கடந்துவிட்டு, புதிய உலக அரசியல்-பொருளாதார திசையை சுட்டிக்காட்டும் மேடையாக மாறியது. இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டின் தொடக்க நாளிலேயே, ‘புதுடெல்லி பிரகடனம்’ ஒருமித்த குரலில் ஏற்றுக்கொள்ளப்பட்டது என்பது, பிரிக்ஸ் நாடுகள் இடையேயான ஒத்துழைப்பு இப்போது ஒரு புதிய நிலைக்கு நகர்ந்துவிட்டதைக் காட்டுகிறது.
இந்தப் பிரகடனம் வெறும் கருத்துத் தொகுப்பல்ல; உலகளாவிய பதற்றங்களுக்கும், அதிகாரச் சமநிலையின்மைக்கும் எதிரான ஒரு அரசியல் அறிக்கையாகவும் பார்க்கப்படுகிறது. குறிப்பாக மத்திய கிழக்கு மோதல், காசா போர் நிறுத்தம், பாலஸ்தீன மக்களின் உரிமைகள், கடல்சார் பாதுகாப்பு, பயங்கரவாத எதிர்ப்பு ஆகியவை ஒரே கட்டமைப்பில் பேசப்பட்டுள்ளன. அதே நேரத்தில், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் சீர்திருத்தம் குறித்து வலியுறுத்தியிருப்பது, ‘Global South’ நாடுகளின் குரல் உலக நிர்வாகத்தில் வலுப்பெற வேண்டும் என்ற அடிப்படை நோக்கத்தை வெளிப்படுத்துகிறது.
இந்த மாநாட்டின் அரசியல் அடையாளத்தை தெளிவாக வரையறுத்தது பிரதமர் நரேந்திர மோடியின் உரை. “நாங்கள் யாருக்கும் எதிரானவர்கள் அல்ல; அனைவருடனும் இணைந்து முன்னேறுவதே எங்கள் நோக்கம்” என்ற அவரது வாக்கியம், பிரிக்ஸ் அமைப்பு மேற்கத்திய கூட்டணிகளுக்கு எதிரான ஒரு ‘பிளாக்’ அல்ல, மாற்று சக்தி மையம் என்ற எண்ணத்தை வலுப்படுத்துகிறது. மீள்திறன், புத்தாக்கம், நிலைத்தன்மை, மனித மைய அணுகுமுறை ஆகியவை இந்தியாவின் தலைமைத்துவக் கோட்பாடுகளாக முன்வைக்கப்பட்டுள்ளன.
இந்த மாநாட்டின் இன்னொரு சுவாரஸ்யமான பரிமாணம் அதன் ‘soft power’ சின்னங்கள். ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினுக்கு திருக்குறள் மொழிபெயர்ப்பை பரிசளித்தது, பின்னணியில் ராமேஸ்வரம் கோயில் கோபுரம் இடம்பெற்றது போன்றவை, இந்தியா தனது பண்பாட்டு அடையாளத்தையும் உலக மேடையில் நுட்பமாக வெளிப்படுத்திய விதமாக பார்க்கப்படுகின்றன.
இதே சமயம், இருதரப்பு உறவுகளும் மாநாட்டின் முக்கிய அம்சமாக அமைந்தன. எத்தியோப்பியா, மலேசியா, ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகளுடன் பிரதமர் மோடி நடத்திய தனிப்பட்ட சந்திப்புகள், பிரிக்ஸ் என்பது ஒரு கூட்டமைப்பு மட்டுமல்ல, பலதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் தளமாகவும் செயல்படுகிறது என்பதை எடுத்துக்காட்டுகின்றன. குறிப்பாக மலேசியாவின் கோட்டா கினபாலுவில் இந்திய துணைத் தூதரகம் அமைப்பதற்கான ஒப்புதல், இந்தியாவின் ஆசியன் (ASEAN) தொடர்புகளை விரிவுபடுத்தும் ஒரு முக்கிய முன்னேற்றமாகும்.
அதேபோல், ஐக்கிய அரபு அமீரகத்துடன் ஒடிசாவில் 11.5 பில்லியன் டாலர் மதிப்பிலான அலுமினியத் திட்ட முதலீடு, பிரிக்ஸ் கூட்டாண்மை இப்போது அரசியல் மட்டுமல்ல, பெரிய பொருளாதார முடிவுகளையும் இயக்கும் சக்தியாக மாறிவருகிறது என்பதற்குச் சான்றாகும்.
‘புதுடெல்லி பிரகடனம்’ விவரங்களில் பல முக்கிய அரசியல்-பொருளாதார சைகைகள் அடங்கியுள்ளன. உலக வர்த்தகத்தில் அமெரிக்க டாலரின் ஆதிக்கத்தை குறைக்கும் நோக்கில், உள்ளூர் நாணயங்களில் பரிவர்த்தனை செய்யும் முயற்சி மீண்டும் வலியுறுத்தப்பட்டுள்ளது. இது, உலக பொருளாதார அமைப்பில் ‘de-dollarisation’ நோக்கத்தின் ஒரு தொடர்ச்சியாக பார்க்கப்படுகிறது.
மேலும், உலக வர்த்தக அமைப்பின் சீர்திருத்தம், பாதுகாப்புவாதத்திற்கு எதிர்ப்பு, விநியோகச் சங்கிலி பாதுகாப்பு ஆகியவை, தற்போதைய உலக பொருளாதார சிக்கல்களுக்கு நேரடி பதில்களாக அமைந்துள்ளன. அதேபோல், பயங்கரவாதத்திற்கு எதிரான கடுமையான நிலைப்பாடு மற்றும் பஹல்காம் தாக்குதலுக்கான கண்டனம், பாதுகாப்பு அரசியலில் பிரிக்ஸ் நாடுகள் ஒரே குரலில் பேசத் தயாராக உள்ளன என்பதை காட்டுகிறது.
மத்திய கிழக்கு பிரச்சினையில், காசா போர் நிறுத்தம் மற்றும் மனிதாபிமான உதவிகள் குறித்து வலியுறுத்தியிருப்பது, இந்த அமைப்பு உலக அரசியல் பிரச்சினைகளில் ‘நடுநிலை-நீதிமுறை’ குரலாக தன்னை நிலைநிறுத்த முயற்சிக்கிறது என்பதைக் காட்டுகிறது. பாலஸ்தீன மக்களின் உரிமைகள் குறித்து தெளிவான ஆதரவு பதிவு செய்யப்பட்டிருப்பதும் அதற்குச் சான்றாகும்.
மொத்தத்தில், 2026 பிரிக்ஸ் உச்சி மாநாடு, ஒரு சாதாரண ஆண்டு கூட்டத்தைத் தாண்டி, “அடுத்த 20 ஆண்டுகளுக்கான திசை நிர்ணயம்” என்ற அளவுக்கு முக்கியத்துவம் பெற்றுள்ளது. உலக அரசியல், பொருளாதாரம் மற்றும் நிர்வாக அமைப்புகளில் மாற்றத்தை நாடும் ‘Global South’ நாடுகளின் கூட்டு குரலாக, பிரிக்ஸ் அமைப்பு தன்னை மறுபரிசீலனை செய்து கொண்டிருக்கும் தருணமாக இதை வாசிக்கலாம்.
நினைவில் நிறுத்த வேண்டிய முக்கிய அம்சங்கள்:
📌 இருதரப்பு ஒப்பந்தங்கள் – மறைமுக பலம்
மலேசியாவில் புதிய இந்திய தூதரகம், ஒடிசாவில் 11.5 பில்லியன் டாலர் அலுமினிய முதலீடு போன்ற அறிவிப்புகள், பிரிக்ஸ் கூட்டமைப்பு பொருளாதார கூட்டாண்மையையும் வலுப்படுத்துகிறது.
📌 பயங்கரவாதத்திற்கு கடும் எச்சரிக்கை
பஹல்காம் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டதுடன், எல்லை தாண்டிய பயங்கரவாதம் மற்றும் அதன் நிதி ஆதாரங்களை முறியடிக்க உறுதியான நிலைப்பாடு மீண்டும் வலியுறுத்தப்பட்டது.
📌 காசா – மனிதாபிமான கோணம்
காசாவில் உடனடி போர் நிறுத்தம், தடையற்ற மனிதாபிமான உதவி, பாலஸ்தீன மக்களின் உரிமை ஆகியவை பிரிக்ஸ் நாடுகளின் ஒருமித்த கோரிக்கையாக வெளிப்பட்டன.


எழுத்தாளர் குறிப்பு
தேவகுமாரன் திருவள்ளுவன்சிறப்புக் கட்டுரையாளர்
தேவா என ஊடக உலகிலும் வாசகர் நடுவிலும் அழைக்கப்படும் தேவகுமாரன் திருவள்ளுவன், முதுகலையில் இணைய இதழியல் பயின்றவர். நடுநிலை வழுவாத அரசியல் பார்வை, எதிர்காலத் தலைமுறையை மனதில் கொள்ளும் சுற்றுச்சூழல் எழுத்து, நல வாழ்வே அனைத்திலும் முதன்மையானது என்பதை வலியுறுத்தும் வாழ்வியல் எழுத்து, கிராமியமே நகரங்களை வாழவைக்கும் ஆன்மா என்பதில் ஆழமான கள ஆய்வு செய்து, தரவுகளோடு நிறுவும் எழுத்து ஆகியவற்றில் ஈடுபாட்டுடன் எழுதி வரும் இதழாளர். சென்னையில் 35 ஆண்டுகளாக வசிக்கும் இவரை, தமிழகத்தின் கிராமங்களில் கழுத்தில் தொங்கும் அவருடைய சோனி கேமராவுடன் அடிக்கடி காணலாம்.
@thirdeye1973@gmail.comகருத்துகள் (0)
ஏற்றுகிறது…


