/
NFNEWSFELT
சினிமா

டோண்ட் டிரபிள் தி டிரபிள் விமர்சனம் | குடும்பத்துக்கான மேஜிக்கல் ட்ரீட்!

அலாவுதீன் அற்புத விளக்கு, ‘ஹாரி பாட்டர்’ பாணி மேஜிக்குகள் என ஷஷாங்க் யெலெட்டி தன்னிடமிருந்த சுவாரசியமான பல யோசனைகளை காட்சிகளாக்கியிருக்கிறார்

Newsfelt Admin2 அக்டோபர், 20264 நிமிட வாசிப்பு
பகிர்:

இயக்குநர் ஷஷாங்க் யெலெட்டி எழுதி இயக்கியுள்ள ‘டோண்ட் டிரபிள் தி டிரபிள்’, ஃபஹத் ஃபாசில் தனி கதாநாயகனாக நடித்துள்ள முதல் தெலுங்குத் திரைப்படம். குழந்தைகளையும், பெரியவர்களிடம் உள்ள குழந்தைத்தனத்தையும் கவரும் நோக்கில் ஒரு மெஜிக்கல் ஃபேண்டஸி திரைப்படமாக இது உருவாக்கப்பட்டுள்ளது.

வருத்தமின்றி விரைவாகப் பணம் சம்பாதிக்க எந்த எல்லைக்கும் செல்லத் துணியும் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் சூரி (ஃபஹத் ஃபாசில்). தனது பொறுப்பற்ற ஓட்டுதலால் ஏற்படும் விளைவுகளைப் பற்றி கவலைப்படாதவன்; குறுக்குவழியில் அதிகப் பணம் சம்பாதிக்கத் தனது நெருங்கிய நண்பனின் பாதுகாப்பைக் கூடப் பணயம் வைப்பவன். அவன் ஏன் இதுபோன்ற குறுக்கு வழிகளை நாடுகிறான் என்பதற்கு வலுவான காரணங்கள் இல்லை என்றாலும், அது ஒரு பெரிய குறையாகத் தெரியவில்லை. ஆனால், ஒரு கட்டத்தில் மூன்று நாட்களில் 25 லட்சம் ரூபாய் தேவைப்பட, தன் கண்ணுக்கு மட்டுமே தெரியக்கூடிய ‘திவ்யா’ (ஷாரா பலேக்கர்) என்கிற சிறுமியைச் சந்திக்கிறான். அவளிடம் இருக்கும் விசேஷ சக்தியை வைத்துத் தன் பிரச்னையைத் தீர்த்துக் கொள்ள நினைக்கிறான். அதைச் செயல்படுத்தும்போது அவன் சந்திக்கும் சிக்கல்களும், அதிலிருந்து மீளும் பயணமுமே இப்படத்தின் திரைக்கதை.

சூரியாக வரும் ஃபஹத் ஃபாசில், மக்கள் கூட்டம் நிறைந்த மார்க்கெட் பகுதியில் ஆம்புலன்ஸை அதிரிபுதிரியாக ஓட்டிச் செல்லும் ஆரம்பக் காட்சியிலிருந்தே தன் அட்டகாசமான நடிப்பால் சிரிக்க வைக்கிறார். அவரது தெலுங்கு உச்சரிப்பு சில இடங்களில் கவனத்தைச் சிதறடித்தாலும், அவரது இயல்பான நடிப்பு அதை மறக்கடிக்கச் செய்கிறது. திவ்யாவாக நடித்திருக்கும் ஷாரா பலேக்கர் ஒரு அருமையான கண்டுபிடிப்பு! பெற்றோரைத் தொலைத்துவிட்டுத் தேடுவதாகட்டும், ஃபஹத்திடம் பிரியம் காட்டுவதாகட்டும், தன் மாயாஜால சக்தியால் வில்லன்களைத் துவம்சம் செய்வதாகட்டும்—நடிப்பில் சிக்ஸர் அடித்திருக்கிறார். இவர்களுடன் ‘ஸ்னூப்பி’ என்ற பீகிள் நாயும் இணைந்து செய்யும் குறும்புத்தனங்கள் ரசிக்க வைக்கின்றன.

மகேஷ் மஞ்ச்ரேக்கர், வெங்கடேஷ் காகமனு எனப் பிற நடிகர்கள் கொடுத்த வேலையைக் கச்சிதமாகச் செய்துள்ளனர். எனினும், சார்மினாரைச் சுற்றியுள்ள பழைய நகரப் பகுதியில் வலம் வரும் மகேஷ் மஞ்ச்ரேக்கரின் வில்லன் கும்பல் கார்ட்டூன் பாணியில் அமைக்கப்பட்டிருப்பதால், நாயகன் ஆபத்தில் இருக்கும் சூழலில் கூட கதையின் விறுவிறுப்புப் பெருமளவில் குறைந்துவிடுகிறது.

அலாவுதீன் அற்புத விளக்கு, குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டுமே தெரியும் கதாபாத்திரங்கள், ‘ஹாரி பாட்டர்’ பாணி மந்திரங்கள் என இயக்குநர் ஷஷாங்க் யெலெட்டியிடம் சுவாரசியமான யோசனைகள் பல உள்ளன. அவை முழுமையான திரைக்கதை அனுபவமாக மாறாமல் போனதுதான் ஏமாற்றம். குறிப்பாக, மையக்கதையை அடைய படம் எடுத்துக்கொள்ளும் காலஅவகாசமும், மாயாஜால வித்தைகள் மீண்டும் மீண்டும் வருவதால் ஏற்படும் நீட்டிப்பு உணர்வும் திரைக்கதையின் பிடிப்பைக் தளர்த்துகின்றன.

ஆனாலும், இடைவேளைக்கு முந்தைய காட்சியில் படம் வேகமெடுத்து அசத்துகிறது. இறுதிக்கட்டத்தில் உணர்ச்சிப்பூர்வமான திருப்பத்தோடு சூரியின் கதாபாத்திரப் பயணம் முழுமையடைவதும், திவ்யாவுக்கும் அவனுக்குமான பாசப்பிணைப்பும் மனதைத் தொடுகின்றன.

கால பைரவாவின் பின்னணி இசை காட்சிகளின் தீவிரத்தையும் நகைச்சுவையையும் சரியாகப் பிரதிபலிக்கிறது. பிராட் பிரான்சிஸின் ஒளிப்பதிவு, ராமா ராஜமௌலியின் ஆடை வடிவமைப்பு, மோகன் நாத் பிங்கி - சந்தீப் சுவர்ணாவின் தயாரிப்பு வடிவமைப்பு ஆகியவை ஹைதராபாத்தின் எளிய பின்னணியைத் தத்ரூபமாகக் கொண்டுவந்து காட்சிகளின் தரத்தை உயர்த்தியிருக்கின்றன.

‘டோண்ட் டிரபிள் தி டிரபிள்’ வன்முறையோ ரத்தக் காட்சிகளோ இல்லாத, எளிதாகப் பார்க்கக்கூடிய ஒரு திரைப்படம். திரைக்கதை எழுத்தில் இன்னும் கொஞ்சம் ‘மேஜிக்’ இருந்திருக்கலாம் என்றாலும், குழந்தைகளுடன் சென்று தாராளமாக மகிழ்ந்து வரலாம்!

மதிப்பெண் 3.2/5

பகிர்:

கருத்துகள் (0)

கருத்திட உள்நுழையுங்கள்.

ஏற்றுகிறது…

தொடர்புடைய கட்டுரைகள்