/
NFNEWSFELT
சினிமா

மிசைய முறுக்கு 2 விமர்சனம் | ஒன்மேன் ஆர்மியின் இசைப் போராட்டம்!

பன்முகத் திறமையில் களமாடிப் பழக்கப்பட்ட ஆதி மீண்டும் திறமையைக் காட்டியிருக்கிறார். மூன்று கதாபாத்திரங்களை மிக யதார்த்தமாகப் பிரதிபலித்திருக்கிறார்.

Newsfelt Admin25 செப்டம்பர், 20264 நிமிட வாசிப்பு
பகிர்:

ஹிப்ஹாப் தமிழா ஆதியின் இயக்கத்திலும் நடிப்பிலும் வெளியாகி உள்ள ‘மீசைய முறுக்கு 2’ திரைப்படம் மூன்று தலைமுறைக் கலைஞர்களின் இசைக் கனவுகளையும் கானா இசைக்கான போராட்டத்தையும் மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது. முதல் பாகத்திற்கும், இரண்டாம் பாகத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இந்த இரண்டாம் பாகத்தில் தாத்தா - அப்பா ஆகிய இருவரது நிறைவேறாத இசைக் கனவுகளுக்கு உயிர்கொடுக்கும் ஒரு திறமையான பேரனின் இசைத் திறமையின் மீது நடக்கும் யுத்தமும் அதை ஒன்மேன் ஆர்மியாக அவன் எதிர்கொண்டு வெல்வதும்தான் கதை.

படத்தின் ஈர்ப்பான துள்ளல் பாடல்களும் இரண்டாம் பாதியின் உணர்வூக்கம் மிக்க காட்சிகளும் ரசிகர்களை ஈர்த்து தொய்வில்லாத திரைக்கதை வழியே முடிவை நோக்கி எவ்வாறு படம் விரைகிறது என்று பார்ப்போம்.

2017-ல் ஒரு தனிமனிதனின் சுயசரிதை எனர்ஜியோடு ‘மீசைய முறுக்கு’ மூலம் இயக்குநராகவும் நாயகனாகவும் முத்திரை பதித்த ஹிப்ஹாப் தமிழா ஆதி, கிட்டத்தட்ட ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு அதன் இரண்டாம் பாகத்தோடு களம் இறங்கியிருக்கிறார். ஆனால், இந்த முறை இது வெறும் ‘ஆதி’யின் கதையாக இல்லாமல் தலைமுறைகள் கடந்த வட சென்னை கானா கலைஞர்களின் உலகளாவிய அங்கீகாரத்திற்கான இசைக் கனவின் போராட்டமாக உருவெடுத்திருக்கிறது. அதுவும் தமிழில் தலித் சினிமா இதுவரை தொட்டிராத, தொட்டிருக்க வேண்டிய ஒரு களத்தைத் தொட்டு தூள் கிளப்பியிருக்கிறார் ஹிப் ஹாப் தமிழா ஆதி.

1970களில் ராயபுரத்து தெருக்களில் கானா பாடும் தாஸ், 1990களில் வாழ்க்கையின் சமரசங்களுடன் போராடும் டைகர் சிவா, தற்காலத்து ஜென் ஸீயான டிஜிட்டல் உலகில் இசையமைப்பாளராகத் துடிக்கும் ஜீவா என மூன்று காலகட்டங்களின் பின்னணியில் கதை பயணிக்கிறது. பாரம்பரியமாக இசையுலகைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஒரு குறிப்பிட்ட இசை வர்க்கத்தின் ஆதிக்கத்தையும், நெப்போடிசம் (வாரிசு அரசியல்) மற்றும் கார்ப்பரேட் கேட்கீப்பிங்கையும் தாண்டி, அடித்தட்டு மக்களின் கானா இசை எப்படி உலக மேடையில் ஒலிக்கிறது என்பதை நோக்கி எழுத்தப்பட்ட திரைக்கதை அட்டகாசமான கிராஃப்ட் ஆக வடிவெடுத்திருக்கிறது.

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம், இசை என பன்முகத் திறமையில் களமாடிப் பழக்கப்பட்ட ஆதி மீண்டும் தன் திரைக்கையாக்கம் - உரையாடல் திறமையைக் காட்டியிருக்கிறார். மூன்று வித்தியாசமான காலக்கட்ட கதாபாத்திரங்களின் தவிப்பையும், குறிப்பாக தற்கால இளைஞனின் கனவுப் போராட்டத்தையும் மிக யதார்த்தமாகப் பிரதிபலித்திருக்கிறார்.

இசையைக் காலக்கட்டங்களின் கதாபாத்திரமாகக் கொண்டுள்ள இப்படத்தில் திரையரங்கை பெரும் இன்னிசை - துள்ளிசை அரங்கமாக மாற்றிவிடுகிறது ஹிப்ஹாப் ஆதியின் இசைத் திறன். ‘ஆரா 10/10’, ‘கோயிந்தம்மா’, ‘பப்பாளி பழமே’ போன்ற பாடல்கள் தியேட்டரில் இன்றைய இளம் ரசிகர்களை ஆட்டம் போட வைக்கின்றன. அமரர் விவேக்கின் இடத்தை நிரப்புவது கடினம் என்றாலும், பாபா பாஸ்கர் தற்போதைய தந்தை கதாபாத்திரத்தில் உணர்வெழுச்சி மிகுந்த காட்சிகளில் கச்சிதமாகப் பொருந்தியிருக்கிறார்.
அதேபோல் நாசருக்கு கருணாஸ் டப்பிங் கொடுத்திருக்கும் பகுதிகள் மற்றும் யோகி பாபுவின் டைமிங் நகைச்சுவை ஆகியவை திரையரங்கில் கரவொலியால் நிறைகின்றன.

ஒளிப்பதிவாளர் பாலாஜி சுப்ரமணியத்தின் கலர்ஃபுல் விஷுவல்களும், பீரியட் கால டோனும் படத்துக்கு காட்சிமொழியை உருவாக்குவதில் பெரும் முதுகெலும்பு.

தலித்திய சினிமாவை முன்னெடுத்து வரும் கலைஞர் தவறவிட்ட ஒரு கதைக் களத்தை தட்டித் தூக்கி, தனது வழக்கமான யூத்ஃபுல் எனர்ஜி மற்றும் கமர்ஷியல் மசாலாவைத் தூவி ஒரு கலவையான விருந்தைக் கொடுத்திருக்கிறார் ஆதி. கனவுகளைத் துரத்தும் இளைஞர்களுக்கும், ஹிப்ஹாப் தமிழாவின் தீவிர இசை ரசிகர்களுக்கும் பெரும் கொண்டாட்டமாக அமைந்திருப்பதால் முதல் பாகத்துக்கு இணையான திரைஅனுபவத்தையும் இசை அனுபவத்தையும் கொடுக்கிறது இந்த ‘மீசைய முறுக்கு 2’

நியூஸ் ஃபெல்ட் மதிப்பெண் 3.7 / 5

பகிர்:

கருத்துகள் (0)

கருத்திட உள்நுழையுங்கள்.

ஏற்றுகிறது…

தொடர்புடைய கட்டுரைகள்

மிசைய முறுக்கு 2 விமர்சனம் | ஒன்மேன் ஆர்மியின் இசைப் போராட்டம்! | NewsFelt